ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கியவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகின்ற நால்வர் ரயிலில் நசியுண்டுள்ளனர். அவர்களில் மூவர் உயிரிழந்திருக்கின்றனர். நான்காவது நபர் உடல் சிதைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். பிரான்ஸின் Pyrénées-Atlantiques பகுதியில் நேற்று (12.10.21) அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மூவரும் ஸ்பெயினில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்த அல்ஜீரியக் குடியேறிகள் எனச் சந்தேகிக்கப்படுவதாக விசாரணையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம்காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஸ்பெயின் – பிரான்ஸ் எல்லையில் குடியேறிகளைப் பராமரிக்கின்ற நிலையம் ஒன்றின் சில ஆவணங்கள் விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. இரவு நேரம் ரயில் தண்டவாளத்தில் உறங்கியவர்களே அதிகாலை வேளை தேசிய ரயில் சேவை நிறுவனத்தின்TER ரயில் ஒன்றில் நசியுண்டுள்ளனர். அந்த மார்க்கத்தில் இரவு 10.30 மணிக்குக் கடைசி ரயில் பயணிப்பது வழக்கம்.
அதன் பிறகு அடுத்த ரயில் அதிகாலை 5 மணிக்கே அவ்வழியே வருவதுண்டு. இடைப்பட்ட இரவு நேரத்தில் போக்குவர த்து எதுவும் இல்லாததால் குடியேறிகள் தண்டவாளப் பகுதியில் படுத்து உறங்கி யிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. மணிக்கு 92 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணித்த TER ரயிலின் சாரதி மிக அருகே வந்த பிறகே தண்டவாளத்தில் சிலர் படுத்திருப்பதைக் கண்டார் என்றும் அவர் உடனடியாக அபாயச் சமிக்ஞை ஒலியை எழுப்பிய போதும் விபத்தைத் தவிர்க்க முடியாமற் போனது எனவும் பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரான்ஸின் எல்லைக்குள் குடியேறிகள் நுழைகின்ற வழிகள் மூடப்பட்டு விட்டதால் ரகசியமான மாற்றுப் பாதைகள் ஊடாக அவர்கள் பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வாறு வருகின்ற குடியேறிகள் அதிகம் நடமாடுகின்ற Hendaye மற்றும் Bayonne நகரங்களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியிலேயே இந்த அவலச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் ஆறு ஒன்றைக் கடக்க முயன்ற குடியேறிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது படம் :நன்றி-Ouest-France செய்திச்சேவை.
குமாரதாஸன். பாரிஸ்.
12-10-2021