யாழ்ப்பாணம் கப்பூது பகுதியில் பால திருத்த வேலைக்காக வெட்டப்பட்ட குழிக்குள் விழுந்து விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். நெல்லியடியை சேர்ந்த பொன்னுத்துரை காண்டீபன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் நேற்றைய தினம் இரவு நெல்லியடியில் இருந்து , நெல்லியடி – சரசாலை வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை , கப்பூது வெளி பகுதியில் பால திருத்த வேலைக்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளார்.
அந்நிலையில் அவ்வீதி வழியாக வந்தவர்கள் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து , அவரை மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்திய சாலையில் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
அதேவேளை , பாலங்கள் மற்றும் வீதிகள் திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் உரிய முறையில் அறிவுறுத்தல்கள் காட்ச்சிப்படுத்துவதில்லை எனவும் அதனால் இரவு வேளைகளில் விபத்து சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் , சில வேளைகளில் இவ்வாறான உயிரிழப்பு ஏற்பட கூடிய விபத்துக்களும் இடம்பெறுவதனால் அவற்றை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.