ராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்கின்ற நிலையில் இது தொடர்பில் நாளையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐந்து பேர் கொழும்பு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை சத்தியாக்கிர போராட்டம் தொடருமென கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காணாமல்போன தமது உறவுகள் குறித்த உண்மையை பகிரங்கப்படுத்துமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் போராட்டம் மேற்கொண்டிருந்தவா்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாளைய தினம் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.