இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள் மற்றும் சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்துமதக்க் குழுக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது
அண்மையில் அயல் நாடான பங்களாதேசில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்களைக் கண்டித்து பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து இந்த குழுக்கள் போராட்டம் நடத்தியதனைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளது.
வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 10க்கும் மேற்பட்ட மத அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எல்லையோர நகரமான பனிசாகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் ஒரு மசூதியும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகளும் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் பெரிய கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இம்மாத தொடக்கத்தில் பங்களாதேசில் ஆண்டுதோறும் நடக்கும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பந்தலில் குரான் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன, நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது