138
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையின் கண்கண்ட சாட்சியமான சிறுவனை அச்சுறுத்தியவர் தொடர்பில் சிறுவனின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னேடுத்து அச்சுறுத்தியவர்களை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு இட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 24ம் திகதி கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். படுகொலையை கண்ணால் கண்ட சாட்சியமாக 12 வயது சிறுவன் உள்ளதாக காவல்துறையினர் 25ம் திகதி நீதிமன்றில் தெரிவித்து இருந்தனர்.
அந்நிலையில் கடந்த 27ம் திகதி சாட்சியமான சிறுவனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சிறுவன் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தரினால் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதனை அடுத்து அன்றைய தினம் பதில் நீதிவான் இ.சபேசன் சிறுவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு இட்டு இருந்தார்.
அந்நிலையில் இன்றையதினம் (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழின் கவனத்திற்கும் சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தரினால் கொண்டுவரப்பட்டது.
சிறுவனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யவேண்டும்.
அதன் போது படுகொலை செய்யபட்ட பெண்ணின் உறவினர்கள் தரப்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஸ் படுகொலையின் சாட்சியமாக உள்ள சிறுவன் வாய் பேச முடியாதவனாக உள்ளார்.
எனவே சிறுவனின் வாக்கு மூலத்தை தமிழ் மொழி நன்கு அறிந்த , சிறுவனின் சைகை மொழி அறிந்த ஒருவரின் உதவியுடன் காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும். கைதடியில் உள்ள நவில்ட் பாடசாலையில் சைகை மொழி தெரிந்த ஆசிரியர்கள் உள்ளனர் அவர்களின் உதவியை கூட நாடலாம்.
சிறுவனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
படுகொலையின் சாட்சியமாக உள்ள சிறுவனின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்றுக்கு உள்ள தற்துணிவு அதிகாரித்தை பயன்படுத்தி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என விண்ணப்பம் செய்தார். அதனை தொடர்ந்து நீதிவான் கட்டளை பிறப்பிக்கையில் ,
சிறுவனுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு.
சிறுவனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபப்ட்டு சிறுவன் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட வேண்டும். சிறுவனுக்கு பாதுக்காப்பு அளிக்குமாறு நீதிமன்று உத்தரவு இட்டத்தற்கு அமைய பாதுகாப்பு வழங்கப்பட்டதா ? அது தொடர்பான V (வி) அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணம் தொடர்பில் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சைகை மொழி தெரிந்தவர்களின் உதவிய நாடவும்.
சிறுவனின் வாக்கு மூலத்தை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும். அதற்கு நவில்ட் பாடசாலையில் இருந்து சைகை மொழி தெரிந்த ஆசிரியர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும். அல்லது சிறுவனுக்கு பரீட்சயமான சிறுவனின் சைகை மொழி தெரிந்தவரின் உதவியுடன் வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும்.
அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விசாரணை.
அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். சிறுவன் கூறும் அங்க அடையாளங்களை கொண்டு அச்சுறுத்தல் விடுத்தவர்களை சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றில் வழங்கு தொடர வேண்டும்.
அச்சுறுத்தல் விடுத்தவர்களின் ஓவியங்களை வரையவும்.
உரிய நிபுணர்களின் உதவியுடன் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் சிறுவன் கூறும் அடையாளங்களை கொண்டு ஓவியம் வரைந்து அச்சுறுத்தல் விடுத்தவர்களை கைது செய்து அவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு தொடருமாறு நீதிவான் கட்டளையிட்டார்.
சிறுவனுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கவும்.
அத்துடன் நீதிமன்றின் மறு அறிவித்தல் வரை சிறுவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு இட்டார்.
Spread the love