Home இந்தியா பெண் தெய்வ வழிபாட்டுக்கு புகழ்பெற்ற இந்தியாவில், பெண் குழந்தைகள் குப்பையில் வீசப்படுகிறார்கள்!

பெண் தெய்வ வழிபாட்டுக்கு புகழ்பெற்ற இந்தியாவில், பெண் குழந்தைகள் குப்பையில் வீசப்படுகிறார்கள்!

by admin

இன்று (நவம்பர் 14.11.21) இந்தியா “குழந்தைகள் தினத்தை” கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று சூரத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

அக்குழந்தை ஒக்டோபர் 28ம் தேதி சூரத்தில் பெஸ்தான் என்கிற பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.

பரத்பாய் பெல் என்கிற நபர் கைவிடப்பட்ட அக்குழந்தையை கண்டெடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். சரியான நேரத்தில் அவர் அக்குழதையைக் கண்டெடுத்ததால் பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.

“அந்த பிஞ்சுக் குழந்தை எப்படி அங்கே இருந்தது என்பதை நினைக்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது. அக்குழந்தையின் நிலையைக் கண்டு எனக்கு கண்ணீர் வருகிறதா? அல்லது அவளின் கள்ளங்கபடமற்ற நிலையினாலா? அல்லது ஈவு இரக்கமற்ற அக்குழந்தையின் தந்தையை நினைத்து எனக்கு கண்ணீர் வருகிறதா என்று எனக்கு தெரியவில்லை” என சம்பவத்தை நினைவுகூர்ந்தார் பரத்பாய் பெல்.

அவள் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தாள், தெருநாய்கள் குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தன. பரத்பாய் அவளை பையில் இருந்து வெளியே எடுத்து, சுத்தம் செய்து, சீராக மூச்சு விட வாயில் காற்றை ஊதி காப்பாற்றினார். ஏறக்குறைய சுயநினைவை இழந்திருந்த அந்தப் பெண் குழந்தைக்கு பரத்பாய் புதிய உயிர் கொடுத்தார்.

“பெண் தெய்வங்கள் பல வழிபாட்டுக்கு உள்ளாகும் இந்தியாவில், பெண் குழந்தைகள் கைவிடப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இந்தப் பிரச்சினையை புரிந்துகொள்ளவும், இந்நிலைக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்வதற்கும், சில நிபுணர்கள் மற்றும் இந்த விவகாரம் தொடர்பாக இயங்குபவர்களிடமும் பேசினோம்.”

பெண்கள் ஏன் அதிகமாக கைவிடப்படுகிறார்கள்?

பெண் குழந்தைகள் அதிகமாக கைவிடப்படுவது இன்றைய இந்திய சமூகத்தின் எதார்த்த உண்மை என பிபிசி குஜராத்தியிடம் கூறினார் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் நகரில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ‘யுனிக் கேர்’ என்கிற இல்லத்தை நடத்தி வரும் பிரகாஷ் கவுர்.

கைவிடப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக உழைப்பதை முன்னிட்டு, பிரகாஷ் கவுருக்கு கடந்த 2018ம் ஆண்டு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்தது.

இது “மிகவும் தீவிரமான சமூகப் பிரச்சனை” என விவரித்த அவர், “இந்தியாவில் ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளே அதிகம் கைவிடப்படுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், பெண் குழந்தைகளை ஒரு சுமையாகக் கருதும் நமது சமூகக் கட்டமைப்பே காரணம். சமூகத்தின் குறுகிய பார்வை, போதிய கல்வி அறிவு இல்லாமை மற்றும் கல்வி முறையில் உள்ள பிரச்சனைகளே காரணம்” என விளக்கினார்

இப்படிப்பட்ட நிலைக்கு சமூகத்தின் மனநிலையும் ஒரு பிரதான காரணம் என அவர் குற்றம் சாட்டுகிறார்.

“இன்றும் நம் இந்திய சமூகத்தில், மகன்தான் குடும்பம் மற்றும் சாதிப் பெருமையின் வாரிசாகக் கருதப்படுகிறான், அதே நேரத்தில் பெண் குழந்தை ஒரு சுமையாகக் கருதப்படுகிறாள். இதை நம்பினாலும் நம்பாவிட்டாலும், அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் கள எதார்த்த உண்மை இதுதான்.”

“இது போக, ஆண் பெண் சமம் என நாம் நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. பள்ளிக்கூடங்ளில் கூட நாம் அவர்களுக்கு சரியான அணுகுமுறையைக் கற்பிப்பதில்லை. அது தான் மக்களின் இது போன்ற செயல்களுக்கு காரணமாகிறது.”

குழந்தைகளை கைவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரகாஷ் கவுர் கூறுகிறார்.

“தற்போதைய சட்ட விதிமுறைகளின்படி, குழந்தையை கைவிடுவது என்பது பிணை பெறக்கூடிய குற்றமாகும், எனவே அவர்கள் எளிதில் விடுவிக்கப்படுகிறார்கள்.

“ஒரு குழந்தையைக் கைவிடும் போது, அக்குழந்தையின் உயிருக்கே பெரும் ஆபத்து ஏற்படலாம். அதை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மக்கள் இது போன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்க, அவர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த கடுமையான சட்டதிட்டங்கள் தேவை. தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் போதுமானதாக இல்லை.” என்கிறார் பிரகாஷ் கவுர்.

சென்ட்ரல் அடாப்ஷன் ரிசோர்ஸ் அத்தாரிட்டி அமைப்பின் முன்னாள் தலைவர் எலோமா லோபோ, சிறுமிகளைக் கைவிடுவது ஒரு கொடூரமான குற்றம் என்கிறார்.

“ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகம் கைவிடப்பட்டுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. பெற்றோருக்கு மூன்றாவது அல்லது நான்காவது குழந்தையாக பெண் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் அக்குழந்தையைக் கைவிடுவது உள்ளிட்ட வாய்ப்புகளைக் குறித்து சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.” என்கிறார் அவர்.

அதிகம் பெண் குழந்தைகள் உள்ளனர்

சென்ட்ரல் அடாப்ஷன் ரிசோர்ஸ் அத்தாரிட்டி (மத்திய தத்து மூலாதார ஆணையம்) அமைப்பிடம் பிபிசி குஜராத்தி தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு அவ்வமைப்பு பதிலளித்துள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் 1,032 ஆண் குழந்தைகள் மற்றும் 1,432 பெண் குழந்தைகள் தத்து எடுத்துக்கொள்ளப்பட தயாராக உள்ளன என்று அந்த ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதவீதத்தில் கணக்கிட்டுப் பார்த்தால், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகம்.

0 முதல் 2 வயது வரையிலான பிரிவில், நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தத்தெடுக்கப்படுவதற்கு 188 சிறுவர்கள் மற்றும் 241 சிறுமிகள் தயாராக உள்ளனர்.

சதவீதத்தில் கணக்கிட்டால் சிறுவர்களைவிட 28 சதவீத சிறுமிகள் தத்தெடுக்கப்பட தயாராக உள்ளனர். பெண் குழந்தைகள் கைவிடப்படுவதும், சமூக மனப்பான்மையும் இத்தகைய சூழ்நிலைக்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆண் குழந்தைகளைவிட சுமார் 40 சதவீதம் அதிகமாக பெண் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

“பெற்றோரின் விருப்பத்தைத் தவிர, பெண் குழந்தைகள் அதிகமாக கிடைப்பதும் பெண் குழந்தைகள் அதிகம் தத்தெடுக்கப்பட முக்கிய காரணமாக உள்ளது” என எலோமா லோபோ கூறினார்.

“நம் இந்திய சமூகத்தில், பல காரணங்களால் பெண் குழந்தைகள் சுமையாக கருதப்படுகிறார்கள். அதனால்தான் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பெற்றோர் அதிகம் கைவிடுகிறார்கள். ஒரு குழந்தை மாற்றுத் திறனாளியாக இருந்து, அவர் பெண் குழந்தையாக இருந்தால் கைவிடப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதுவே ஒரு ஆணாக இருந்தால் பெற்றோர் எப்படியாவது அவரை குடும்பத்துடன் வைத்திருப்பார்கள்” என்கிறார் அவர்.

பெண் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும்படி மக்களை வலியுறுத்துகிறார் பிரகாஷ் கவுர், ஒருவேளை அவர்கள் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், ‘யுனிக் கேர்’ அமைப்பைத் தொடர்புகொண்டு, தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார்.

“பெண் குழந்தைகள் அன்பின் கடல், அவர்களை விட்டுவிடாதீர்கள், ஏதோ ஒருவகையில் கைவிடப் போகிறீர்கள் என்றால், அவர்களை எங்களிடம் கொடுங்கள், நாங்கள் பெண் குழந்தையை எடுத்துக்கொள்கிறோம், அவர்களை தூக்கி எறிய வேண்டாம், அவர்களைக் கொன்றுவிட வேண்டாம், அவர்களை வாழ விடுங்கள்” என்கிறார் அவர்.

பெண் குழந்தைகள், அதிகம் தத்தெடுக்கப்படுவது பெண் குழந்தைகள் விரும்பப்படுகிறார்களோ என்ற எண்ணத்தைத் தருகிறது. ஆனால், தத்தெடுக்கப்படுவதற்கு கிடைப்பது அதிகம் பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள் என்னும்போது தத்து எடுக்கப்படுவதும் பெண் குழந்தைகளாக இருக்கத்தானே வாய்ப்பு அதிகம்?

பெண் குழந்தைகள் அதிகம் கைவிடப்படுவதாலேயே அவர்கள் தத்துக்கு கிடைக்கிறார்கள் என்பதுதான் மத்திய ஆணையத்தின் தரவுகள் காட்டும் விவரம்.

  • அர்ஜுன் பார்மர்
  • பிபிசி குஜராத்தி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More