சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியே மஹிந்த ராஜபக்ஸ வெற்றிக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டிகள் நடைபெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையிலான இன்றைய (22.11.21) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளேவிடம், வாய்மூல விடைக்கான மேலதிக வினாவை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், விளையாட்டு போட்டிகளை நடத்த முடியும். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்றே புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், மஹிந்த ராஜபக்ஸ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், காலியில் இன்று (22.11.21) நடைபெறும் இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏன் இரு சட்டங்கள்? ஒருவேளை இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கும் மஹிந்த ராஜபகஸ கிண்ணம் என்று பெயர் வைத்திருந்தால், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.