தமிழர்தம் அரங்க மரபுகளில் தனித்துவமான ஆளுமையாக மிளிர்பவர் பத்தண்ணா என அழைக்கப்டும் இளைய பத்மநாதன் அவர்கள். தமிழர்தம் அரங்க மரபுகளுள் சமூக நீதிக்கும், சமூக விடுதலைக்குமான குரலாக ஒலிக்கும் அரங்கச்செயற்பாடுகளைக் கவனமெடுத்து முன்னெடுத்து வருபவர் பத்தண்ணா அவர்கள்.
நாடோடிகள் முன்னெடுத்த கந்தன் கருணை நாடகம் அரங்கப் போராட்டமாகவே அமைந்து போனது. நாடக ஆற்றுகைக்கான கைப்பொருட்கள் தற்காப்பிற்கும், எதிர்ப்பிற்குமான கருவிகளாக மாறி உருவெடுக்க வேண்டியதாயிற்று. அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை ஆற்றுகைச் சூழல் அவ்வாறு அமைந்திருந்தது. அதன் நெறியாளராக இளைய பத்தண்ணா இருந்தார்.
கலைக்கு உருவம் முக்கியமா? உள்ளடக்கம் முக்கியமா? என்ற பொருத்தமற்ற விவாதம் நடந்த காலத்தில் கந்தன் கருணை ஆற்றுகை பொருத்தமான விடையாக அமைந்திருந்தது. ஆனால் அது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது வரலாறு. உருவாமா? உள்ளடக்கமா? என்ற கலைப் பொருத்தமற்ற விவாதம் றெஜி சிறிவர்த்தனா அவர்களது லங்கா கார்டியன் கட்டுரையுடன் வாய் மூடிக்கொண்டது.
இதற்குச் சமாந்தரமாகத் தேசிய நாடக உருவாக்கம் பற்றிய உரையாடல்களும் வடிவம் அல்லது உருவம் பற்றிய கதையாடல்களாகவே அமைந்திருந்தன. ஏறத்தாழ ஐம்பது வருட காலமாக தேசிய நாடக உருவாக்கம் பற்றிய கதையாடல்கள் எதையும் உருவாக்காமலே காணாமல் போய்விட்டன ஆயினும் புதிய புதிய கதையாடல்கள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.
இத்தகைய கதையாடல்கள் பரபரக்கும் காகிதச் சூழல் கடந்து தமிழர் அரங்க மரபுகளை உள்வாங்கி சமூக நீதிக்கும் சமூக விடுதலைக்குமான நாடக முன்னெடுப்புகள் பத்தண்ணாவினுடையதாக இருந்தது. ஈழத்திலும் இந்தியாவின் தமிழ்நாட்டிலும் அவுஸ்தரேலியாவை மையப்படுத்தி புலம்பெயர் தேசங்களிலும் அவரது அரங்கச் செயற்பணி தொடர்ந்தது.
நவீன மரபுகளிலும், கிராமிய மரபுகளிலும் பரீச்சயம் கொண்ட பத்தண்ணாவின் தேடல் தொல்சீர் தமிழ் இலக்கியங்களை நோக்கியும் உள்நுழையத் தொடங்கியது.
அவரது ஆய்வுப் பயில்வுகள் ஆற்றுகைகளிற்கு வளர்ச்சி கொடுத்தன. அவரது ஆற்றுகைகள் ஆய்வுப் பயில்வுகளின் ஆழத்தின் தேவையை வற்புறுத்தி இருக்கின்றன. இதன் அறிவார்ந்த விளைவுதான் அவரது ‘அரங்கத்திறம்’ என்ற பேராய்வு நூல். ஆற்றுகையும் ஆய்வும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்து நிற்பது பத்தண்ணாவின் அரங்க இயக்கம்.
பத்தண்ணா என்றழைக்கப்படும் இளைய பத்மநாதனின் அரங்கப் பயணம் மற்றுமொரு முக்கிய செய்தியையும் எம்முள்ளும் எம்முன்னும் விரித்து நிற்கின்றது. தமிழர்களின் உள்ளூர் அரங்குகள் உட்பட்ட சமகால அரங்குகளையும் தமிழர்தம் தொல்சீர் அரங்க மரபுகளையும் உள்வாங்கி அரங்கப் படைப்பாக்கங்களை நிகழ்த்துவதுடன் உலகின் பல்வேறு தேசங்களிலும் வாழும் தமிழரதும் தமிழர் வழிவந்தோரதும் மட்டுமல்லாது பழங்குடி மக்களதும் இன்னும் பல்வேறு அரங்க மரபுகளது பரீச்சயமும் ஓயாத தேடலும் கொண்டது அவரது வாழ்வு.
இந்த வகையில் தமிழர்தம் மேடை மைய நவீன அரங்கு என்று சொல்லப்படும் காலனிய அரங்கை அதன் தளத்தில் காலனிய நீக்கம் செய்யும் பெரும் முயல்வு பத்தண்ணாவினுடையது. இந்த வகையில் பத்தண்ணா விரித்து ஆராயப்பட வேண்டியவர்.
பத்தண்ணாவின் அரங்க அரசியல் வெளிப்படையானது. அரங்கின் மாயத்துள் குறிப்பாக நவீன அரங்கின் மாயத்துள் பூடகங்களாகப் புரியாது மலைக்க வைப்பவையல்ல. அவரைப் போலவே உரத்தவையும் வெளிப்படையானவை.
இத்தகைய கலைஞனின் உயிர்ப்பு எங்களிலும் ஊடுருவி மலர்ச்சி கொள்ளட்டும்.