கொடிகாமத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் சந்தை கட்டடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் , கட்டடத்திற்கும் டிப்பர் வாகனத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கொடிகாம சந்தியில் உள்ள வீதி சமிஞை விளக்கு சிவப்பு நிறத்திற்கு மாறுவதற்கு ஓரிரு நிமிடங்கள் இருந்த வேளை , முன்னால் சென்ற டிப்பர் சந்தியை தாண்டும் நோக்குடன் வேகமாக பயணித்துள்ளது. பின்னால் வந்த டிப்பரும் , வேகமாக சந்தியை கடக்கும் நோக்குடன் பயணித்த போது , திடீரென முன்னால் சென்ற டிப்பர் சடுதியாக நிறுத்தப்பட்டதால் , பின்னால் வேகமாக வந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சந்தை கட்டடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தினால் டிப்பர் வாகனம் வீதியின் குறுக்கே நின்றமையால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , டிப்பர் வாகனத்தை அவ்விடத்திலிருந்து அகற்றி காவல் நிலையம் எடுத்து சென்றுள்ளதுடன் , போக்குவரத்தையும் சீர் செய்தனர்.