ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தங்க நகை மற்றும் ஆலயப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
“கொடிகாமம் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 21ஆம் திகதி 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆலயத்திலிருந்த பொருள்களும் திருட்டுப் போயிருந்தன. அதுதொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அத்துடன், சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 22ஆம் திகதி 20 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப் போயிருந்தது. அதுதொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இரண்டு ஆலயங்களிலும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்டக் குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளில் நாவற்குழியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்திருந்த ஒருவர் தப்பித்திருந்தார். சந்தேக நபர் ஆலயங்களில் திருடிய பணத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான நகையை வாங்கி அணிந்திருந்துள்ளார். அந்த நகை காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் கொடிகாமம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். தங்க நகையும் சான்றுப்பொருளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.