176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் நீர்வழங்கல் தொடர்பிலான பிரச்சனைகள் தொடர்பில் விசேட விவாதம் எதிர்வரும் 23ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வடமாகாண குடிநீர் பிரச்சனை மற்றும் நீர் வழங்கல் தொடர்பிலான பிரச்சனைகள் குறித்து விவாதம் நடாத்த ஒரு நாள் அமர்வு நடாத்தப்பட வேண்டும் என எழுத்து மூலம் அவைத்தலைவரிடம் கோரி இருந்தனர்.
சட்டத்திற்கு முரணானது.
அவ்வாறு விவாதம் நடாத்துவது சட்டத்திற்கு முரணானது. குடிநீர் பிரச்சனை தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகின்றது. அந்நிலையில் அது தொடர்பில் விவாதம் நடாத்துவது நீதிமன்றை அவமதிக்கும் செயலாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சட்டத்திற்கு முரணானது இல்லை.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா இங்கே நாம் யாழ்ப்பாணத்தில் உள்ள குடிநீர் பிரச்சனை என குறிப்பிடவில்லை , வடமாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை என குறிப்பிட்டு உள்ளோம். அதேபோன்று நீர்வழங்கல் தொடர்பிலான பிரச்சனை எனவும் குறிப்பிட்டு உள்ளோம். அதில் எவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு உள்ளது என கேள்வி எழுப்பினார்.
விவாதிப்பது தொடர்பில் முன்னரே அறிவியுங்கள்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், அவ்வாறு எனில் எந்த எந்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்க போகின்றீர்கள் என முன்னரே அறிவித்தால் , அது நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்பு பட்டதா இல்லையா என தீர்மானித்து அது தொடர்பில் விவாதம் நடாத்துவோம் என கூறினார்.
வரையறைக்குள் விவாதம் நடாத்த முடியாது.
அதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர் வரையறைக்குள் விவாதம் நடாத்த முடியாது. விவாதம் நடாக்கும் போது வழக்குடன் தொடர்பு பட்ட விடயம் தொடர்பில் விவாதம் நடந்தால் அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவைத்தலைவருக்கு உண்டு அவர் அதனை கட்டுப்படுத்தலாம். என தெரிவித்தார்
23ம் திகதி விவாதம்.
இவ்வாறாக வடமாகாண முதலமைச்சருக்கும் , எதிர்கட்சி தலைவருக்கும் இடையில் நடைபெற்ற நீண்ட விவாதத்தின் பின்னர் எதிர்வரும் 23ம் திகதி வடமாகணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் நீர் வழங்கல் தொடர்பிலான பிரச்சனைகள் தொடர்பில் விவாதிக்க என விசேட அமர்வு நடாத்த தீர்மானிக்கப்பட்டது
Spread the love