பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக தொிவித்து கொடூரமான முறையில் எாித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் முக்கிய குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனா்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக இருந்த இலங்கையரான 40 வயதான பிரியந்த குமார தியவடன என்பவா் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பின்னா் உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தாா்.
சிசிடிவி காணொளிகளை வைத்து பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனா்.
வெளிநாட்டைச் சேர்ந்த மேலாளருக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை முதலே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சியால்கோட்டில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர் யாசிர் ராசா பிபிசி உருது மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது