ராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராடிவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்றையதினம் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிமலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணியில் புதுக்குடியிருப்பு மக்களின் 49 சொந்த வீடுகள் உள்ளடங்கியிருப்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் தனியாருடைய காணிகளில் இராணுவம் இருப்பது தொடர்பான சான்றுகள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.
அருகில் உள்ள அரச காணிகளுக்கு இராணுவத்தை நகர்த்தி அம்மக்களின் காணிகளை விடுவிக்கும்படி நாடளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன் பிரகாரம்; பிரதிப்பாதுகாப்பு அமைச்சர், இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிப்ர் ஆகியோரை தொடர்பு கொண்ட பிரதமர் நிலைமைகளை ஆராய்ந்தார்.
இதன் அடிப்படையில் இராணுவ வசமுள்ள குறித்த 49 வீடுகளையும், காணிகளையும் உரிமையாளர்களிடம் உடன் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , பாராளுமன்ற உறுப்பினர்கள்மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்துள்ளார்.