Home உலகம்அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் கதவு திறக்கப்பட்டுள்ளது!

அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் கதவு திறக்கப்பட்டுள்ளது!

by admin

அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என அமெரிக்கா மேன்முறையீடு செய்த வழக்கை நேற்று (10.12.21) விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதிக்க முடியாது என கூறி கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான கதவு திறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா பிரித்தானியாிடம் கோரிக்கை விடுத்தது. உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் நீதிமன்றத்தில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும், மன ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டு சிறையில் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. கீழ் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றில் அமெரிக்கா மேல்முறையீடு செய்தது. இந்த மேன்முறையீட்டில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாஞ்சேயை வாடுகடத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு அசாஞ்சேக்கு மேலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More