7 முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சியை அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் விதிக்கப்பட்ட தடையை விலக்கவும் மறுத்துள்ளது.
கீழ் நீதிமன்றம் ஒன்று தடை விதித்து பிறப்பித்த தடையாணையை அகற்ற முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் டிரம்ப் விதித்த தடையை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்கா எதிர்கொள்வதாக கருதப்படும் தீவிரவாதத்தை அரசு நிரூபிக்கவில்லை என இந்த நீதிமன்ற அமர்வின் 3 நீதிபதிகளும் ஒருமனதாக தெரிவித்துள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளமைக்கான எந்தவொரு சான்றுகளையும் அரசாங்கம் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் அமெரிக்காவின் குடிவரவு கொள்கையை உருவாக்குவது ஜனாதிபதி என்கிற ஒரே நபர்தான் என்கிற வாதத்தையும் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆபத்திலுள்ளதாகவும் இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள போவதாகவும் டிரம்ப் ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.