நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பர் டெஸ்மண்ட் டுட்டு. இருவரும்
சுவேட்டோ (Soweto) என்ற நகரில் உள்ள விலகாசி என்ற தெருவில் (Vilakazi Street)
சிறிது காலம் அடுத்தடுத்த வீடுகளில் வசித்துள்ளனர்.உலகில் ஒரே தெருவில் வசித்த இருவர் நோபல் சமாதானப் பரிசை வென்ற வரலாறு அந்தத் தெருவுக்கு இருக்கிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் இருவரையும் ஹோக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு துணிந்து கேட்ட ஒரே மதத் தலைவர் டுட்டு.
2003 இல் ஈராக் நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக அதிபர் சதாம் ஹுசேய்ன் பேரழிவு ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்று இரு தலைவர்களும் பொய்கூறினர் என்று குற்றம் சுமத்தியே இருவரையும் அனைத்துலக நீதிமன்றத்தில்நிறுத்துமாறு டுட்டு கோரினார்.
ஈராக் மீது பொய் கூறித் தொடுக்கப்பட்டஅந்தப் போரே உலகில் இதற்கு முந்தியமோதல்கள் எதனையும் விட அதிகமாகஉலகத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதித்துப் பிரிவினைகளையும் தோற்றுவித்தது என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார். ஈராக் போருக்கு முன்னரும் பின்னரும் அந்த மண்ணில் உயிரிழந்த பொது மக்களது எண்ணிக்கை ஒன்றே புஷ்ஷையும் பிளேயரையும் நீதியின் முன் நிறுத்துவதற்குப் போதுமானது என்று டுட்டு வாதிட்டார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக உலகம் சித்தரித்தபோதும் தமிழர்களது பிரதிநிதிகளாகப்புலிகளைத் தன்னளவிலே அங்கீகரித்தமுக்கிய உலகப் பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர். புலிகளது முக்கிய தலைவர்கள் பலருடன் தொடர்பை பேணியவர்.
இலங்கையில் இறுதிப் போரை நிறுத்துவதற்குத் தன்னாலான பல முயற்சிகளைஇறுதிக் கணம் வரை முன்னெடுத்தவர்.
போரின் போதும் பின்னரும் இலங்கைஅரசு மீது சர்வதேச அழுத்தத்தை உருவாக்குதற்கான சக்திகளோடு நெருக்கமாகச்செயற்பட்டவர்.
இப்படி டெஸ்மண்ட் டுட்டுவின் வாழ்க்கைக்குப் பின்னால் பல கதைகள் இருக்கின்றன.
தென் ஆபிரிக்காவின் கேப் டவுண்(Cape Town) நகரில் இன்று காலமான அவருக்குஉலகெங்கும் இருந்து உணர்வுபூர்வமானஅஞ்சலிச் செய்திகள் வெளியாகி வருகின்றன.”மனித உரிமைகளுக்காகவும் மக்களது சமத்துவத்துக்காகவும் தனதுவாழ்வை அர்ப்பணித்தவர் டுட்டு.
நிறவெறிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கும்தென் ஆபிரிக்காவின் நல்லிணத்துக்குமாக அவர் நடத்திய நீண்ட போராட்டம் என்றைக்கும் நினைவு கூரப்படும்” என்று பிரான்ஸ் அதிபர் எமானுவல் மக்ரோன்தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
நெல்சன் மண்டேலா நிறுவகம் (Nelson Mandela Foundation) விடுத்துள்ள அஞ்சலி
குறிப்பில், அவரை “ஓர் அசாதாரண மனிதப்பிறவி – ஒரு சிந்தனையாளர் -தலைவர் – ஒரு நல்ல மேய்ப்பர் ” என்று வர்ணித்திருக்கிறது. நிறவெறி எதிர்ப்புப் போராளியானமறைந்த மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King) அவர்களது புதல்வியாகிய பேர்நீஸ் கிங் (Bernice King) விடுத்துள்ளசெய்தியில், “ஓர் உயர்ந்த – செல்வாக்குமிகுந்த- உன்னத மனிதர் இப்போது நித்திய சாட்சியாகி விட்டார் “என்று தெரிவித்திருக்கிறார்.
வத்திக்கானில் இருந்து புனித பாப்பரசர்அவர்களும் டுட்டுவின் மறைவுக்குத் தனது இரங்கலை வெளியிட்டிருக்கிறார். திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தனது செய்தியில்,” வாழ்க்கைமுழுவதுக்கும் அர்த்தத்துடன் வாழ்ந்தஓர் ஆன்மீகவாதி டுட்டு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
டுட்டுவுக்கு எழுந்து நின்று அஞ்சலி செலுத்துவதாகப் பலஸ்தீன விடுதலை இயக்கம் தெரிவித்திருக்கிறது.”சுதந்திரம் மற்றும் விடுதலையை நோக்கிய தங்களது போராட்டத்தின் ஒரு தீவிரமான ஆதரவாளர் டுட்டு “-என்று ஹமாஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தலைவரான பசிம் நயீம் (Basim Naeem) கூறியிருக்கிறார்.
“பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, எனக்கும் இன்னும் பலருக்கும் சிறந்த நண்பராகவும், அறிவுரையாளராகவும் தார்மீக வழி காட்டியாகவும் விளங்கினார்” என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக்ஒபாமா தெரிவித்திருக்கிறார்.
தென் ஆபிரிக்காவின் கேப் டவுண் நகரின் மலைப்பகுதியில் அமைந்துள்ள நகரசபைக் கட்டடம் இன்றிரவு பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் அங்கிலிக்கன் வர்ணமாகிய ஊதாப்பூ நிறத்தில் ஒளி யூட்டப்பட்டிருந்தது.1931 ஒக்ரோபர் 7 ஆம் திகதி பிறந்தடுட்டு, கேப் டவுண் நகரின் முதலாவது கறுப்பினப் பேராயர் என்ற பெருமைக்குரியவர்.
-பாரிஸிருந்து குமாரதாஸன்.
26-12-2021