அச்சுவேலி காவல் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் , அரசியல் தலையீட்டினால் , தடைப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் மட்ட தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
அச்சுவேலி காவல் நிலைய பொறுப்பதிகாரி , மற்றும் அங்கு கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகே அச்சுவேலி காவல் நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டு
அங்கே பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் அச்சுவேலி காவல் நிலைய பொறுப்பதிகாரியையும் , அங்கு கடமையில் உள்ள ஒரு சில காவல்துறை உத்தியோகஸ்தர்களையும் , இடமாற்றம் செய்ய தீர்மானித்து , அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் அரசியல்வாதி ஒருவரின் தயவை பொறுப்பதிகாரி நாடியதை அடுத்து , அவரின் தலையீட்டினால் , பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அதேவேளை , குறித்த காவல்நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவர் , உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த கான்ஸ்டபிளுக்கும் பல தடவைகள் இடமாற்றம் வழங்கப்பட்ட போதிலும் , அவரும் ஏதோ ஒருவகையில் தனது இடமாற்ற உத்தரவை இரத்து செய்து அச்சுவேலி காவல் நிலையத்திலையே தொடர்ந்து கடமையாற்றி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.