திவிநெகும சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும், மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுஇடம்பெற்ற திவிநெகும சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திவிநெகும மூலம், மாகாண சபைகளுக்கு உரிய பல விடயங்களை மத்திய அரசாங்கம் கையகப்படுத்தியமையே பிரச்சினையாக உள்ளதாகவும் எனவே இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் இந்த கால கட்டத்தில், மாகாண சபைகளில் இருக்கும் விடயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைகள் பலவீனப்படுத்தப்பட்டது என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளது எனவும் எனவே, அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.