பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செலஸ்டின் ஸ்ரனிஸ்லாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் , பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை தான் பதிவு செய்துள்ளதாகவும் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் சபையின் தலைவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காததன் காரணமாக திகதியிடப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை இடம்பெற்ற வழக்கிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகளை மேற்கொண்டுள்ளார். அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண காரியாலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி மிரட்டி அலுமாரியினை உடைத்து கொழும்பிற்கு எடுத்துச் சென்று அழித்துள்ளார்.
பனை அபிவிருத்தி சபையின் சொத்துக்களை தனியொருவர் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது. எனவும் பொது நபராக தான் இதற்கு வழக்கு தொடுத்துள்ளதாகவும் இந்த வழக்கின் மூலம் அவரது ஊழல்கள் அம்பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு, சபைக்கு பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஏன் மௌனம் காட்டுவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பனைஅபிவிருத்திச் சபையின் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டி கொடுக்க முடியும் ஆனால் தற்போதுள்ள தலைவர் போன்றவர்களின் ஊழல் நடவடிக்கையின் காரணமாக பனை அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் மிகவும் பூச்சிய நிலையில் காணப்படுகின்றது இது தொடர்பில் ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும் என்றார்.