யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களமக்களிடம் பகிரங்கமாக, தேசிய ரீதியில் மன்னிப்புக் கோரினாலேயே எமது நாட்டின் அரைவாசிப் பிரச்சினைகள் தீா்ந்து விடுமென யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனா்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராக இருந்த எஸ்.பி.திவாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடா்ந்து சாட்சியமளித்த அவா் , தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லவர்கள், எனது 40 வருடகால அரச சேவையில் அவர்களோடு இணைந்து சிறப்பாக சேவையாற்றியுள்ளேன். கொடுத்த ஒரு விடயத்தை அவா்கள் சிறப்பாக செய்து தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்றும் மொழிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இன்றும் தெற்கில் உள்ள அரச அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு அலுவலக கடிதங்களை அனுப்புகின்றார்கள்.
இம்மொழிப்பிரச்சினைக்கு அரசமட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொண்னம்பலம் காலம்தொட்டு தொடர்கிறது எனவும் அவா் தெரிவித்துள்ளார்.