ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங்களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறியதனை அடுத்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். எனினும் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருவதுடன் உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியன சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்துள்ளன.
இதனால் ஆப்கானிஸ்தானில் வேலையின்மை, வறுமை, பசி பட்டினி அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கள் சிறுநீரகங்களை விற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிக அளவில் சிறுநீரகங்களை விற்பதாக கூறப்படுகிறது.
ஆப்கன் சட்டப்படி, உடல் உறுப்புகளை விற்பனை செய்வது சட்டவிரோதம் என்ற போதிலும், உயிர் வாழ்வதற்காக சிறுநீரகங்களை விற்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என மக்கள் கூறுகின்றனர். இதனிடையே, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்று வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஆப்கன் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, முடக்கி வைக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்த உலக வங்கியும் சர்வதேச நாணயநிதியமும் ஆப்கன் அரசுக்கு அனுமதியளிக்க வேண்டும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.