Home இலங்கை இரா. சம்பந்தனின் அவசர கடிதம்! ஜெனீவாவிற்கு பறந்தது!

இரா. சம்பந்தனின் அவசர கடிதம்! ஜெனீவாவிற்கு பறந்தது!

by admin

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதரக உயர் ஸ்தானிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கடந்த 31ஆம் திகதியன்று கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

மேன்மை தாங்கியீர்,

46/1 தீர்மானத்தின் ஏற்பாடுகளுக்கமைய மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் மேற்கொள்ளப்படும் எழுத்துமூல விளக்கத்திற்குப் பின்னர் இலங்கையின் நிலமை ஆராயப்படும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ((U.N.H.R.C) 49வது கூட்டத்தொடருக்கான ஒரு முன்னோடியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருக்கும் மிகப் பெரிய தமிழ் அரசியல் கட்சியின் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) தலைவர் என்ற வகையில் நான் இதனை உங்களுக்கு எழுதுகின்றேன்.

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ஆயுதம் தாங்கிய இன மோதல் முடிவுற்ற ஒரு வாரத்தினுள் 2009 மே 23 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இலங்கைக்கான விஜயத்தின் முடிவில் இலங்கை அரசாங்கத்தினாலும் ஐக்கிய நாடுகளினாலும் ஏனைய பல விடயங்களோடுகூடவே பின்வருமாறு கூறும் ஒரு கூட்டறிக்கை விடுக்கப்பட்டது.

 'சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கும் அமைவாக, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான தனது வலுவான கடப்பாட்டை இலங்கை மீளவலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களை கையாள்வதற்கான ஒரு பொறுப்புக்கூறல் நடைமுறையின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் கோடிட்டுக் காட்டினார்.  அப்பிரச்சினைகளைக் கையாண்டு தீர்;ப்பதற்கு அரசாங்கம்  நடவடிக்கைகளை மேற்கொள்ளும்;'.    

மேற்காணும் கடப்பாடுகளை கையாண்டுத் தீர்ப்பதற்கு எதுவித காத்திரபூர்வமான நடவடிக்கைகளையும் இலங்கை கடந்த பன்னிரெண்டு(12) வருடங்களில் மேற்கொள்ளவில்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை (U.N.H.R.C) 2021 மாரச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தோடு, ஏழு (7) தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

இதனிடையே இலங்கை பெருமளவுக்கு அமுல்படுத்தப்படாத பல்வேறு கடப்பாட்டு அறிக்கைகளை விடுத்துள்ளது. பொறுப்புக் கூறல் விடயத்தைக் கையாண்டு தீர்க்காதுவிட்டதற்கு மேலதிகமாக, இலங்கை அரசாங்கமானது, இராணுவமயப்படுத்தல், சிவில் சமூக மற்றும் ஊடகத் துறையினர் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் அத்துடன், தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் ஏனையவர்கள் ஆகியோரைப் புதிதாகக் கைது செய்வதோடு கூடவே அரசியல் கைதிகளை காலவரையறையற்று தடுத்து வைத்திருத்தல், பல்வேறு அரசாங்க திணைக்களங்களின் செயல்பாடுகள் மூலமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்தம் காணிகளில் மீளக் குடியேற விடாது தடுத்தல், பாரம்பரிய கூட்டு காணி உரிமைகளையும் கால்நடைகளின் மேய்ச்சல் உரிமைகளையும் மறுத்தல் அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை கண்காணித்தலை தீவிரப்படுத்தல் ஆகியன அடங்கலாக இலங்கைத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ் மக்களை அவர்தம் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிப்பதற்கு மேலதிகமாக, தொல்லியல் அகழ்வாரய்ச்சிகள், வன விலங்கு பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்பு எனும் போர்வையில் தற்போது நடைபெற்று வரும் காணிச் சூறையாடல்தான் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான ஆபத்தாகும்.

பிரதேச எல்லைகளை மீள் வரையறை செய்தல் மற்றும் எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினையின் எந்த ஒரு தீர்வையும் அர்த்தமற்றதாக்கும் வண்ணம் வரலாற்று ரீதியான தமிழ் பேசும் பகுதிகளை சிங்களக் குடியேற்றாளர்களைக் கொண்டு குடியேற்றல் நிகழ்ச்சித் திட்டமொன்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலைமையில், தமிழ் மக்கள் தமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நாட்டை விட்டுச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் நாடுகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் இச் செயற்பாடுகள், தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசங்களாகக் கொண்டு, ஐக்கிய பிரிபடாத இலங்கையினுள் வாழ்ந்துவரும் ஒரு மக்கள் குழுமத்தினர் என்று உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எண்ணக்கருவை தோற்கடித்து அதன்மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரு சிங்கள பெரும்பான்மையின பிரதேசங்களாக முனைப்புடன் மாற்றியமைக்கும் எண்ணம் கொண்டவையாகும்.

46/1 ஆம் இலக்க தீர்மானம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகள் தொடர்பாக அதன் செயலாற்றுகையை மதிப்பிடுமுகமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை (U.N.H.R.C) 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடுகின்றபோது, மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான தனது கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதென்பதையும் அம் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரே உறுதியான வழியாக தமிழ் தேசியப் பிரச்சினையைக் கையாண்டு தீர்ப்பதற்கு அது எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைக்குமாறு உறுப்பு நாடுகளை நான் வலியுறுத்துகிறேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More