அமெரிக்கா-ரஷ்யா மாறி மாறி சுட்டால் அது உலகப் போர்!”-பைடன்
ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் அத்துமீறியது யு.எஸ். நீர்மூழ்கி !
அமெரிக்காவுக்கு “ஹிஸ்தீரியா”உச்சத்தில்! சாடுகிறது மொஸ்கோ!
வான்வழி தாக்குதல் அடுத்த வாரம்என்று உளவுத் தகவல் எச்சரிக்கை!
பழைய”ஸ்ரிங்கர்”ஏவுகணைகளைதூசி தட்டி அடுக்குகிறது டென்மார்க்!
மேற்கு நாடுகள் அனைத்தும் தமது பிரஜைகளை வெளியேற்றுகின்றன
கடந்துபோன பனிப் போர்க் காலத்தின் எச்சமாக மேற்குலகில் இன்னும் எஞ்சிக் கிடப்பவை அமெரிக்காவின் ஸ்ரிங்கர் ஏவுகணைகள்.(Stinger missiles) இலகுவாகத் தோள்களில் சுமந்து சென்று குறுகிய தூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய விமான எதிர்ப்பு ஆயுதம்
அது.போர்க் களங்களை விடவும்”வீடியோ கேம்”களில் மட்டுமே இப்போது அவற்றை அதிகமாகக் காணமுடிகிறது. ரஷ்யாவுடன் குறுகிய கடற் பரப்பால் பிரிக்கப்பட்ட பால்டிக் நாடுகளுக்கு தற்சமயம் இந்த ரக ஏவுகணைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.
பல தசாப்தங்களாக ரகசிய களஞ்சியம் ஒன்றில் கிடந்த பழைய ஸ்ரிங்கர் ஏவுகணைகளை வெளியே எடுத்துத் தூசி தட்டி அவை என்ன நிலையில் இருக்கின்றன, வெடிக்குமா வெடிக்காதா என்று சோதிக்கிறது டென்மார்க் இராணுவம்.
சுவீடனைப் போன்றே பெரும் போர்களில் சம்பந்தப்பட்டிராத டென்மார்க் நாடு அதன் பல நூற்றுக்கணக்கான துருப்பினரை முழுப் போராயத்த நிலையில் Slagelse என்ற இடத்தில் உள்ள இராணுவ வாடி வீடுகளுக்கு அனுப்பியிருக்கிறது. பனிப்போருக்குப் பிறகு இவ்வாறு ஒரு தயார்நிலை பேணப்படுவது இதுவே முதல்சந்தர்ப்பம் ஆகும்.
அதேசமயம் – டென்மார்க் மண்ணில் அமெரிக்கத் துருப்புகளும் ஆயுதங்களும் நிலைகொள்வதற்கான அனுமதியை வழங்குகின்ற இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கையை அவசரமாகக் இந்த வாரம் உறுதி செய்திருக்கிறார் பிரதமர் Mette Frederiksen அம்மையார்.மொஸ்கோ உக்ரைன் மீது வான்வழிக் குண்டுவீச்சை “அடுத்த வாரம் புதன் கிழமை” தொடங்கக் கூடும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைவதற்கு முன்பாகவே ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நிகழக் கூடிய நிலைமை உள்ளது என்று அமெரிக்கராஜாங்கச் செயலர் பிளிங்கென் எச்சரித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் பைடன் என்பிசி தொலைக்காட்சிக்கு கடைசியாகஅளித்த நேர்காணலில் “ரஷயர்களும் அமெரிக்கர்களும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டால் அது உலகப் போர்”என்று வர்ணித்திருக்கிறார்.”அதன் பிறகு உக்ரைனில் இருந்து அமெரிக்கக் குடிமக்களை வெளியேற்றுவதற்கு நேரம் இருக்காது.எனவே உடனே கிளம்பிநாட்டுக்கு வாருங்கள்” என்று அவர் தனது மக்களை அவசரமாக அழைத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அவசர முடிவைத் தொடர்ந்து பிாித்தானியா, நெதர்லாந்து ,டென்மார்க், இத்தாலி, ஜேர்மனி அவுஸ்திரேலியா உட்பட ஒரு டசினுக்கு மேற்பட்ட நாடுகள் தத்தமது குடிமக்களை உக்ரைனை விட்டுவிரைந்து வெளியேறும்படி கேட்டிருக்கின்றன.
புடினுடன் எந்நேரமும் தொடர்புகளைப் பேணக் கூடிய நிலையில் இருக்கின்ற பிரான்ஸ் இன்னமும் பதற்றத்தை வெளிப்படுத்தவில்லை. உக்ரைன் தலைநகரில் (Kyiv) இயங்கும் அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அவசியமற்ற பணியாளர்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர் என்று ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. அங்கிருந்த முக்கிய ஆவணங்களைஅதிகாரிகள் அழித்து வருகின்றனர்எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையில் மேற்கு முனையில் போர்பதற்றம் நிலவுகின்ற சமயத்தில் ரஷ்யாவின் தூரக் கிழக்குக்கரையில் அமெரிக்கநீர்மூழ்கி ஒன்று அத்துமீறிப் பிரவேசித்திருப்பதாக மொஸ்கோ குற்றம் சுமத்தியிருக்கிறது.
ரஷ்யா – பெலாரஸ் இணைந்துபோர் ஒத்திகைகளை நடத்திவருகின்ற குறில் பசுபிக் தீவின் (Kuril Islands) அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக ‘இன்ரபக்ஸ்’ (Interfax) செய்திச்சேவை தெரிவிக்கிறது.போரைத் தவிர்க்கின்ற இறுதி முயற்சிகள் எனக் கூறப்படும் ராஜீகத் தொலைபேசி உரையாடல்களை மொஸ்கோவுடன் மக்ரோனும் ஜோ பைடனும் சனிக்கிழமை நடத்தியிருக்கின்றனர்
. “பேச்சுக்களில்நேர்மையாக இருங்கள்,படைநடவடிக்கையில் இறங்குவதானால் முறைப்படி அதனை அறியத் தாருங்கள்” என்றுஅதிபர் மக்ரோன் புடினிடம் தெரிவித்தார் என்று எலிஸே மாளிகை கூறுகிறது.
ஆக்கிரமித்தால் பெரும் விலை செலுத்தநேரிடும் என்று எச்சரித்தாரே தவிர ரஷ்யாவின் பாதுகாப்புக் கவலைகளுக்கான எந்த உறுதிப்பாட்டையும் பைடனின் உரையாடல் எட்டியும் தொடவில்லை என்று கிரெம்ளின் மாளிகை தெவித்துள்ளது.
போர்.. போர்.. என்று பதற்றத்தைத் திணிக்கின்ற “ஹிஸ்தீரியா” மனநிலையிலேயே அமெரிக்கா இன்னும் இருக்கிறது என்று கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார். ஆக்கிரமிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்ற உக்ரைன் நாட்டு அதிபரும் அமெரிக்கா தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
——————————————————————– –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 13-02-2022