ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் நேற்று (18.02.22) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றனர்.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை நீதி கிடைக்காமையை எடுத்துக் காட்டும் முகமாகவே கலந்துரையாடலுக்கு யாழ். ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றிருந்தனர்.
ஊடகவிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்திருந்ததை அவதானித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, தானும் ஒரு ஊடகவியலாளனாக மூன்று பத்திரிகைகளில் கடமையாற்றியதாகக் குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுக்குத் தான் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் ஊடகவியலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்