கிழக்கு ஐரோப்பியப் போர் நெருக்கடி இப்போதைக்கு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலம் இழுபடக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதாக ரஷ்யா அறிவித்த பின்னர், உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தன்னாட்சிப் பிராந்தியங்களில் ஷெல் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன.
உக்ரைன் படைகளே தாக்குதலைத் தொடக்கியிருப்பதாகக் கிளர்ச்சியாளர்களும் கிளர்ச்சிப் படைகளே ரஷ்யாவின் தூண்டுதலில் ஷெல் வீச்சுக்களை நடத்துகின்றனர் என உக்ரைனும் மாறி மாறிக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பதற்றத்தைத் தணிப்பதாகக் கூறிவிட்டு போரை ஆரம்பிப்பதற்குச் சாக்குப் போக்கான காரணம் ஒன்றை உருவாக்குவதில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. தனது படைகள் எல்லை மீறிச் செல்வதற்கு வாய்ப்பான ஒரு கள நிலைவரத்தை கிளர்ச்சியாளர்வசம் உள்ள இரண்டு தன்னாட்சிப் பிராந்தியங்களிலும் உருவாக்கி அதன் மூலம்அங்கு தனது படைகளை நகர்த்துவது மொஸ்கோவின் இராணுவ உத்தியாகஇருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
டொன்பாஸ் (Donbas) என்பது ரஷ்யாவோடு எல்லையைக் கொண்டுள்ள உக்ரைனின் கிழக்குப் பிராந்தியம். 2014 இல் கிரீமியா குடாவை ரஷ்யா ஆக்கிரமித்த சமயத்தில் உக்ரைன் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இங்கு சண்டைகள் மூண்டன.
அச்சமயம் டொன்பாஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகியஇரண்டு பகுதிகள் கிளர்ச்சிப் படைகளது வசமாகின. அவற்றை அவர்கள் ரஷ்யாவின் ஆதரவோடு தன்னாட்சிக் குடியரசுகளாக நிர்வகித்து வருகின்றனர்.
உள்நாட்டுக்குள்ளேயே தனது சொந்த டொன்பாஸ் பிராந்திய மக்களை உக்ரைன் படைகள் கொடுமைப்படுத்தி இனப்படுகொலை புரிந்து வருகின்றன என்று மொஸ்கோ குற்றம் சுமத்தி வருகிறது.
டொன்பாஸ் நெருக்கடியைத் தணிப்பதற்கு சர்வதேச முயற்சியுடன் உருவாக்கப்பட்ட மின்ஸ்க் உடன்படிக்கையை ரஷ்யாவும் உக்ரைனும் மதித்துப் பின்பற்றவில்லை.இப்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிராந்தியம் ஐரோப்பியப் போர் ஒன்றுக்கான மையமாக மாறியிருக்கிறது.
ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படைகளால் நிர்வகிக்கப் படுகின்ற டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) இரண்டிலும் போர் பதற்றத்தை அதிகரித்து அந்த மக்களை பாரிய அளவில் ரஷ்யாவுக்கு வெளியேற்றுகின்ற முயற்சிகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலில் பெண்கள் குழந்தைகள், வயோதிபர்களை வெளியேறுமாறு கிளர்ச்சித் தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள்.அதனால் அங்கு வசிக்கும் பல லட்சம் மக்கள் பெரும் இடப்பெயர்வு அவலம் ஒன்றுக்கான ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
ஆண்கள் அனைவரையும் போருக்கு அணிவகுக்குமாறு கிளர்ச்சியாளர்கள் உத்தரவிட்டிருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் உக்ரைனுக்கு இவ்வாறு இராணுவ ரீதியில் நெருக்குதல் கொடுத்தபடி மறுபக்கத்தில் அரசியல் ரீதியில் அழுத்தம் தரும் ஒரு நடவடிக்கையிலும் மொஸ்கோ இறங்கியுள்ளது.
டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) இரண்டையும் தனிநாடுகளாக – சுதந்திரக் குடியரசுகளாக- அங்கீகரிக்கின்ற ஒரு தீர்மானத்தை ரஷ்யாவின் நாடாளுமன்றமாகிய டூமா (Duma) நிறைவேற்றியிருக்கிறது.அந்தத் தீர்மானம் அதிபர் புடினின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.
உக்ரைனைத் தன்னுடன் மீள இணைக்கமுடியாவிட்டாலும் அங்குள்ள இரண்டு தன்னாதிக்கப் பகுதிகளையும் சுதந்திர நாடுகளாக மாற்றித் தனக்குச் சார்பான ஆட்சிகளை அங்கு நிறுவிக் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் நாகரீகத்தைவிஸ்தரிப்பது புடினின் நோக்கமாக உள்ளது.
2014 இல் உக்ரைனில் தன்னாட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) இரண்டையும் கீவ் அரசு அங்கீகரிக்கவில்லை. உக்ரைன் இராணுவச் சோதனைசாவடிகளால் சூழப்பட்ட இவ்விரு பிரதேசமக்களும் சதா போர்ப் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி வாழ்வைக் கழிக்கின்றனர்.
*வரைபடம் :ரஷ்ய ஆதரவுடன் சுதந்திர நாடுகளாக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்பிராந்தியங்களது அமைவிடம்.-
—————————————————————- –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 19-02-2022