“புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள். இதன் மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி. பற்றி பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எவ்வளவு படுகொலைகள், அட்டூழியங்கள் புரிந்தார் என்பதும் தெரியும்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி. குண்டர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா? என்பதற்குப் பதில் கூறவேண்டும். இறுதிப் போரின்போது பிரபாகரனின் சடலம் எனக் காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள். இலங்கை முழுவதும் பவனியாகக் கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால், தற்போது இந்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து. அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்துக்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது?
அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பிரபாகரன் ஒரு போர் வீரன்; கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதைக் கூறுகின்றார். படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர், பிரபாகரனின் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். ஆயுதங்கள் இல்லாமல்தான் எதிரியிடம் மண்டியிடுவதையே சரணடைதல் என்பார்கள்.
அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோம் என ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம்? யார் புதைத்தது? என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலைக் கரைத்துவிட்டோம், எறிந்துவிட்டோம் என்றார்கள்.
பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காகக் கருணாவையும், தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்த நபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் இறப்பு விசாரணை நடைபெறவில்லை?
ஹெலி மூலம் கருணாவைக் கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட மருத்துவ அதிகாரியைக் கூட்டிச்சென்று இறப்புச் சான்றிதழை வழங்கவில்லை? இந்தியாவுக்கு ஒரு நீதிமன்றச் சான்றிதழை வழங்கியுள்ளீர்கள்.
அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியென்றால் ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை?
பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும். அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார், சடலத்தை எடுத்தோம், புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.