போர்ப் பதற்றத்தில் சிக்கியிருக்கும்உக்ரைன் நாட்டின் பல்கலைக் கழகங்களில் குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் கற்கின்ற வெளிநாட்டு மாணவர்களில் அரைவாசிப் பங்கினர் இந்தியர்கள். அவர்களில் பாதிப் பேர் மருத்துவ மாணவர்கள் ஆவர். அங்கு சுமார் இருபது இலங்கை மாணவர்களும் தங்கியிருந்து கல்வி கற்கின்றனர்.
இந்தியப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான அனுமதி பெறுவது மிகக் கடினமானதும் நிதிச் செலவு மிக்கதும் என்பதால் இந்திய மாணவர்கள் அதிகமானோர் உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகங்களை நாடுகின்றனர்.
ரஷ்யா தாக்கக் கூடும் என்ற பயத்தில் உக்ரைனில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறி வருவதால் மாணவர்களும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது. கீவில் உள்ள இந்தியத் தூதரகம் மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளைமுன்னெடுத்துள்ளது.
ஆயினும் அங்கு பல்கலைக்கழகங்கள் இன்னமும் இயங்கிவருகின்றன.அதனால் மாணவர்களது நிலைமை குழப்பத்தில் உள்ளது. இடையில் வெளியேறிச் செல்லும் மாணவர்கள் இணைய வழியில் கற்றல்செயற்பாடுகளைத் தொடர்வதற்கான வசதிகளைச் செய்வதற்குப் பல்கலைக்கழகங்கள் பின்னடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதனால் தங்கள் உயர் கல்வி இடைநடுவில் குழம்பிவிடலாம் என்று வெளிநாட்டு மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட இருபதாயிரம் பேரை அங்கிருந்து அழைத்துவருவதற்கான விமான சேவைகளை புதுடில்லி ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை அரசு அங்குள்ள தனது பிரஜைகள் சுமார் நாற்பது பேரையும் துருக்கியில் உள்ள அதன் தூதரகத்தோடு தொடர்புகளைப் பேணி வருமாறு அறிவுறுத்தி உள்ளது. இலங்கை மாணவர்களில் ஆறுபேர் ஏற்கனவே கொழும்பு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ள பெலாரஸ் உட்பட வேறு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கை, இந்திய மாணவர்கள் உயர்கல்வி பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, ரஷ்யா, உக்ரைனின் கிழக்கில் கிளர்ச்சியாளர்களது கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களைச் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்திருப்பதை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஷ்ய அதிபரது செயலைக் கண்டிப்பதற்காக நேற்று இரவோடு இரவாகக் கூட்டப்பட்ட ஐ. நா. பாதுகாப்புச்சபையின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதி ரி. எஸ். திருமூர்த்தி (T S Tirumurti)-ரஷ்யா – உக்ரைன் எல்லை நிலைவரம்தொடர்பில் இந்தியாவின் கவலையை மட்டுமே தனது வாசகத்தில் வெளியிட்டாரே தவிர ரஷ்யாவைப் பெயர் குறிப்பிட்டுக் கண்டனம் செய்வதைத் தவிர்த்துக்கொண்டார்.
———————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.22-02-2022