விளையாட்டுத்துறையை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் பியூஸின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பெரும் இழப்பாகும்.
மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியில் இருந்து பட்டி தொட்டி எல்லாம் தெரியும் அளவுக்கு தனது கால்பந்தாட்டத்தின் திறமையினால் மிளிர்ந்தவன் பியூஸ்.
1990 ஆண்டு பிறந்த பியூஸ் சிறுவயதில் இருந்தே கால்பந்தாட்டத்தின் தீவிர ரசிகன் ஆவான்.
கால் பந்தின் மேல் கொண்ட தீரா காதல் காரணமாக பாடசாலை காலங்களில் பாடசாலை அணிக்காக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளுக்கு சொந்தக்காரன்.
பாடசாலை மட்டத்தில் மாத்திரம் இல்லை கழக ரீதியான போட்டிகளிலும் பிரகாசித்த பியூஸ் ஒரு கட்டத்தில் கால்பந்தாட்டத்தில் தமிழர்களுக்கான அடையாளம் ஆனான்.
தேசிய போட்டிகள் மாத்திரமின்றி சர்வதேச போட்டிகளிலும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த பியூஸ் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து பல காயங்கள் உபாதைகளை பொருட்படுத்தாமல் நாட்டுக்காகவும் தனது அடையாளத்தை நிலைப்படுத்த போராடிய ஒரு வீரன்.
சொந்த நாட்டில் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடினாலும் தொழில் சார் அங்கீகாரம் என்பது தமிழர்களுக்கு எப்போதும் எட்டாக்கனியாக உள்ளது.
நீண்ட போராட்டங்களின் பின்னர் தனக்கான அங்கீகாரத்துக்காக மாலைதீவில் கிடைத்த வாய்ப்பின் காரணமாக அங்குள்ள கழக அணி ஒன்றுடன் ஒப்பந்த ரீதியில் பணியாற்றி வந்த நிலையிலே நேற்றைய தினம் (26.02.22) இந்த துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல கால்பந்தாட்ட வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த வீரன் தனக்கான தொழில் ரீதியான அங்கீகாரம் தன் நாட்டில் கிடைக்காமையினால் வேறு ஒரு நாட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி நிரப்ப முடியாத வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தி சென்றுள்ளமை மன்னார் மாவட்டத்தையும் இல்லை கால்பந்தாட்டத்தில் பால் ஈர்க்க முடியாத பலருக்கு மீள முடியாத துயராகும்.
சொந்த நாட்டில் தனக்கான அங்கீகாரம் இன்றி போராடும் பலருக்கு இவன் ஒரு அத்தியாயத்தை ஆரம்பித்து செல்கின்றான்.