ரஷ்யாவுக்கு எதிரான போர்க்கூட்டணி ஒன்றை உருவாக்க நாடுகள் முயன்றுவருகின்ற நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான உலக அரசியலில் அந்நாட்டின் பிர பலம்மிக்க வோட்கா (vodka) சாராயம் சிக்கியுள்ளது.
பல நாடுகளில் வோட்கா மதுப்புறக்கணிப்புப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. டென்மார்க்கின் பிரபல சுப்பமார்க்கெட் சந்தைகள் வோட்கா உட்பட ரஷ்யத் தயாரிப்புகளைத் தங்கள் கடைகளில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்குஎதிர்ப்புத் தெரிவிப்பதற்காக வோட்காமதுவை வீதிகளில் கொட்டியும் போத்தல்களை உடைத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருப்பது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, கனடா நாடுகளில் புடின் எதிர்ப்பாளர்கள் வோட்காமது வகைகளை அகற்றுமாறு மது அருந்தகங்களிடம் பொது வேண்டுகோள்களை விடுத்திருக்கின்றனர். Russian Standard, Russian Standard Gold, Siberian brand Husky Vodka, the traditional Polugar Classic Rye Vodka,Ustianochka, Beluga Noble Russian Vodka போன்ற பிரபல ரகங்கள் புறக்கணிப்பை எதிர்நோக்கியுள்ளன.
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் (New Hampshire) ஆளுநர் ரஷ்ய வோட்காவுக்கான தடை உத்தரவு ஒன்றையும் விடுத்திருக்கிறார். அதேசமயம் உக்ரைன் நாட்டில் வடிக்கப்படுகின்ற வோட்கா (Khor vodka) வகைகளுக்கு மதுப்பிரியர்கள் தங்கள் பேராதரவைத் தெரிவிக்கும் வகையில் பெரும்எடுப்பில் அவற்றைக் கொள்வனவு செய்கின்றனர் என்று கூறப்படுகிறது.
முதலில் 14 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் அறிமுகமானது என்று சொல்லப்படுகின்ற “வோட்கா” சுமார் 40 வீதத்துக்கும் அதிகமான மதுசாரம் அடங்கிய பழம் பெரும் வடிசாராயம் ஆகும். பிரான்ஸில்சமீபத்திய தரவுகள் வோட்காவை அதிகம் பெண்களே விரும்பி அருந்துகின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.27-02-2022