நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமானவர்களே பொருளாதார பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்ணுதாரணம் காட்டியும் உரையாற்றினார்.
இலங்கையில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (10.03.22) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐவர் அடங்கியக் குழுவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்த ஐவரும் பேராசிரியர்கள். இவர்களில் ஒருவர் நோபல் பரிவு பெற்றவர் எனவும் தெரிவித்தார்.
எனினும் இலங்கையின் பொருளாதாரப் பேரவையில் உள்ளவர்களுக்கு என்ன பட்டம் உள்ளதென்று தெரியாது. இக்குழுவில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை வைத்தே நாட்டின் பொருளாதார நிலைமைகளுக்கு அரசாங்கம் என்னமாதிரியான பதிலை வழங்கும் என தெரிகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்குழுவில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் இருக்கிறார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் ஊடாக பசில் ராஜபகஸவின் இயலாமையே வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டும் இவர்களே இக்குழுவில் இருப்பதில் எந்தவிதமானப் பிரயோசனமும் இல்லை எனவும் தெரிவித்தார்.