திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் மரங்கள், மூலிகைகள் எரிந்து அழிவடையும் நிலையில் வனவிலங்குகள் குடியிருப்புகள் நுழைந்து விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக மச்சூர் மற்றும் அதனை சுற்றிய வனப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயில் பல ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து அழிவடைந்துள்ள நிலையில் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்தநிலையில் கொடைக்கானல் அருகே கூக்கால், பழம்புத்தூர் கிராமங்களையொட்டிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதனால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், புல்வெளிகள் என கருகி நாசமாகின்றன. தீயைக் கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
வனப்பகுதிகள் தொடர்ச்சியாக தீப்பற்றி எரிகின்றன. இதனால் விலையுயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகளும் பலியாகின்றன. இதுமட்டுமின்றி வனவிலங்குகள் காடுகளில் இருந்து குடியிருப்புக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீயை விரைவாக அணைத்து தீத்தடுப்பு முன்னெச்சரிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
தற்போது ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி பரவிவரும் காட்டுத்தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தாவிடில் அரியவகை மூலிகைச் செடிகள், மான்கள், புலிகள் மற்றும் யானைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது எனவும் அவா்கள் தொிவித்துள்ளனா்.