இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான காங்கேசன்துரையில் துறைமுக மேம்பாடு, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து பிரதமர் மோடி இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதேபோல் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல்வழி போக்குவரத்து தொடங்குவது குறித்தும் இருதலைவர்கள் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ராமாயண, பவுத்த சுற்றுலா குறித்து பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா – இலங்கை இடையே நட்புறவை வலுப்படுத்தி இருநாட்டு கலாச்சாரம், பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் வளர்ச்சி அடைவது தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அத்துடன் இந்தியாவில் பவுத்தமத சுற்றுலாவையும் இலங்கையில் ராமாயண சுற்றுலாவையும் அனுமதிப்பது தொடர்பாக பேசியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளது.