ஊடகவியலாளர்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்பதற்கான வலுவான சமிஞ்சை
தேசிய தொலைக்காட்சி அலைவரிசையில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றிய பாரமி நிலேப்தி ரணசிங்கவை அதன் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பணிக்குத் திரும்ப வேண்டாமென நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாகத் தனது முகப்புத்தக சமூக வலைதள கணக்கில் பாரமி குறிப்பொன்றை சேர்த்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகச் சுதந்திர ஊடக இயக்கத்தின் வினவலுக்குப் பதிலளித்த பாரமி நிலேப்தி, மேலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் “ரிவி தின அருணெல்ல” உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் துணையாகத் தனது சேவை இனிமேல் அவசியமில்லையெனத் தயாரிப்பாளர்கள் கூறியதாகத் தெரிவித்தார்.
முகப்புத்தக பதிவுகள்மூலம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பதால் குறித்த ஊடகவியலாளரை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் ஈடுபடுத்த வேண்டாமென ஜனாதிபதி அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளதாக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடக இயக்கம், இந்தச் சம்பவத்தைப் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் கடுமையான மீறல் என கருதுவதுடன், அரசுக்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சிவில் உரிமைகள் காணப்படுவதனை இங்கு தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும், பாரமி ஏதேனும் முகப்புத்தக பதிவுகள் செய்திருப்பின், அது அவரது தனிப்பட்ட சமூக ஊடகப் பதிவாகும். அந்தப் பதிவுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் எந்தவொரு தரப்பினரையும் இவ்வாறான வேட்டையாடுவதற்கு தேவையான நிபந்தனைகளை அதிகாரிகளுக்கு வழங்கும்பட்சத்தில், அதனை மிக மோசமான மற்றும் பாரதூரமான செயற்பாடாகவே சுதந்திர ஊடக இயக்கம் பார்க்கிறது. .மேலும், ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற வலுவான சமிக்ஞையை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.
கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் தாம் கண்காணிக்கப்படுவதாகச் சந்தேகம் தெரிவித்து காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சுதந்திர ஊடக இயக்கமும் இவ்விடயம் தொடர்பில் தனது அவதானத்தை செலுத்தி வந்தது.
இவ்வாறான சூழலில், பாரமி தொடர்பான இச்சம்பவத்தைப் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மீறப்படும் சம்பவமாக மாத்திரம் கருதாமல், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பைக் குலைக்கும் உளவு நடவடிக்கை நடைபெற்று வருவதை எடுத்துக் காட்டும் சம்பவமாகவே இதனை கருதவேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் நம்புகின்றது.