குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனக்கு வழங்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தி உள்ளது எனவும், மக்களுடன் சுதந்திரமாக பேச முடியவில்லை எனவும் , இந்த பாதுகாப்பை தான் விரும்பவில்லை எனவும் , ஆனாலும் தற்போது பாதுகாப்பு அத்தியாவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து உள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
என்னை மூன்று தடவைகள் கொலை செய்ய முயற்சித்து உள்ளார்கள். என கிளிநொச்சி நீதிமன்றில் பொலிசார் எழுத்து மூலம் தகவல்கள் வழங்கியுள்ளனர்.
என்னை கொல்வதற்கு வெளிநாட்டில் இருந்து பணம் மற்றும் அறிவித்தல் வந்து உள்ளதாக காவல்துறையினர் கூறினார்கள். அதற்கு சான்றாக சந்தேக நபர்களின் கணக்கு இலக்கங்கள் , மற்றும் அவர்களின் அலைபேசிகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அவை மன்றினால் மேலதிக ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு அறிக்கை வரும் வரையில் மேலதிகமாக எதனையும் என்னால் சொல்ல முடியாது.
கைது செய்யபப்ட்டு உள்ள ஐந்து பேரும் முன்னாள் போராளிகள் என்பதனால் புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் மீது குற்றம் சாட்ட முடியாது. என்னை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது என்பது பொய்யானது என சந்தேகிக்க முடியாது.
எனக்கு வழங்கபட்டு உள்ள பாதுகாப்பு எனக்கு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடன் சுதந்திரமாக பேச முடியவில்லை. இந்த பாதுகாப்பை நான் விரும்பவில்லை. ஆனால் தற்போது பாதுகாப்பு அத்தியாவசியமானது. என மேலும் தெரிவித்தார்.