Home இலங்கை கோட்டா கோ கம: இறந்த காலத்திலிருந்து  பாடம் எதையும் படிக்காத  ஒரு முட்டாள் தீவில் ஒரு புதிய கிராமம் – நிலந்தன்.

கோட்டா கோ கம: இறந்த காலத்திலிருந்து  பாடம் எதையும் படிக்காத  ஒரு முட்டாள் தீவில் ஒரு புதிய கிராமம் – நிலந்தன்.

by admin

தோன்றிய அன்றே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு கிராமம் என்றால் அது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டா கோகம கிராமம்தான். உலகில் அதிகம் பேர் உற்றுக் கவனிக்கும் ஒரு கிராமமாக அது மாறிவருகிறது. இலங்கைத்தீவில் அதுதான் மிகப் பிரசித்தமான ஒரு ட்ரெண்ட்.இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்ற கிராமத்தின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டது.இப்பொழுது கோட்டா கோகம  என்ற கிராமம் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது.

அரசுக்கு எதிரான போராட்டங்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவில் பெருந்தொற்று நோய்க் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட கபன் துணி போராட்டம் புத்தாக்கத் திறன் மிக்க ஒரு குறியீட்டுப் போராட்டம். அதுபோலவே கோட்டா கோகமவும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை.உருவாக்கப்பட்ட மிகச் சில நாட்களுக்குள் அதுபோல வேறு எந்தக் கிராமமும் வேகமாக வரவில்லை.அதில் குடியிருப்பவர்களைப் பொறுத்தவரை அது ஒரு புரட்சிக்  கிராமம். கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்கும் எல்லாருக்கும் அது ஒரு புரட்சி கிராமம். 

இந்தியாவில் ஆந்திராவில் தெலுங்கானா விடுதலை போராட்டத்தின்போது கவிஞர் சொரபண்டார ராஜ் எழுதிய ஒரு கவிதை உண்டு. ரகசியம் காக்கும் புரட்சிக் கிராமம் என்று அதற்குத் தலைப்பு.ஆந்திராவில் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மத்தியிலும் உலகம் முழுவதிலும் சுதந்திரத்துக்காகப் போராடிய எல்லாம் மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் அவ்வாறான ரகசியம் காக்கும் புரட்சிக் கிராமங்கள் காணப்பட்டன. விடுதலைப் போராட்டத்தை அவைதான் அடைகாத்தன.

ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஆர்பாட்டக்காரர்களின் குடியிருப்பு என்ற அடிப்படையில் கோட்டா கம கிராமத்துக்கு ஒரு புரட்சிகரமான பாத்திரம் உண்டு. அது இப்பொழுது அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறியீடாக மாறியிருக்கிறது.மேலும் அது இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை நோக்கிய கட்டமைப்பு மாற்றத்தைக் கருக்கட்டும்  கிராமமாகவும் வளர்ச்சி பெற்றால் அது மகத்தானதே.

இது நோன்பு காலம் என்பதனால் ஒருபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் அக்குடியிருப்புக்கு உதவுகிறார்கள்.தவிர கரு ஜயசூரியவால் நிர்வகிக்கப்படும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உதவிகளைச் செய்வதாக தகவல். மேலும் மாணவர் அமைப்புக்களும் அங்கே நிற்பதாக ஒரு தகவல். எனவே காலிமுகத்திடலில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தங்குமிட வசதிகளும் ஏனைய வசதிகளும் ஏதோ ஒரு விதத்தில் கிடைப்பதாக தெரிகிறது. இனி வெளிச்சக்திகளும் அக்கிராமத்தை தத்தெடுக்க முயற்சிக்கக்கூடும் .

கொழும்பில் உள்ள மேற்கத்திய நாட்டுத் தூதுவர்கள் தமது ருவிட்டர் பக்கங்களில் வெளியிடும் செய்திகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காணப்படுகின்றன.மேற்கத்தைய ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் விவகாரத்தை பெருப்பித்து எழுதுகின்றன. குறிப்பாக சில தமிழக யூடியூப்பர்களின் கற்பனையை  தாங்கமுடியவில்லை.சில யூடியூப்பர்களின் பொய்களை மில்லியன் கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் சரியான தகவல்களைத் தரும் யூடியூப்களை  அந்தளவு தொகையினர் பார்ப்பதில்லை.

நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் பொதுவாக இரண்டு வகைப்பட்டவை. ஒருபகுதி ஆர்ப்பாட்டங்கள் கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுகின்றன. மற்றொரு பகுதி தன்னியல்பானது.கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் தன்னியல்பாக தெருவுக்கு வருகிறார்கள். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டமும் அத்தகையதே.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் எந்தக் கட்சியின் கொடிகளும் காணப்படவில்லை. ஏந்தக் கட்சியின் கோஷமும் காணப்படவில்லை. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான கோஷங்களும் சிங்கக்கொடியும் மட்டும்தான் காணப்படுகின்றன. அவர்களை இரண்டு விவகாரங்கள் இணைக்கின்றன ஒன்று ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான கூட்டுணர்வு.இரண்டாவது, இலங்கையர்கள் என்ற கூட்டுணர்வு.சிங்கக்கொடி அதைத்தான் பிரதிபலிக்கிறது.மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கட்சிப் பிரமுகர்களைக்  காணமுடியவில்லை. கட்சி முக்கியஸ்தர்களும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் சற்று விலகி நிற்பதாக தெரிகிறது. அரசியல் கட்சிகளை நீக்கிவிட்டு மக்கள் தன்னியல்பாக ஆர்ப்பாட்டங்களை,போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இலங்கைத் தீவில் மட்டும்தான் நடக்கும் ஒரு விவகாரம் அல்ல.ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டக்களத்தில் தாற்காலிகமாகத் தங்கியிருந்து போராடுவதும் இதுதான் முதற்தடவையல்ல.அதற்கு உலக அளவிலும் பிராந்திய அளவிலும் உள்நாட்டிலும் முன்னுதாரணங்கள் உண்டு.

அமெரிக்காவின் வோல்ட்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தில் அவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.அரபு வசந்தத்திலும் அவ்வாறான ஏற்பாடுகள் காணப்பட்டன. இந்தியாவில் அண்மையில் வெற்றி பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது டெல்லியில் விவசாயிகள் தற்காலிகமாக தங்கி இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன..இவைதவிர சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடாத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மெரினா கடற்கரையில் அவ்வாறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

இவையாவும் நாட்டுக்கு வெளியே உள்ள உதாரணங்கள். நாட்டுக்குள் தமிழ்ப்  பகுதிகளில் கடந்த 12 ஆண்டுகளில் துலக்கமான மூன்று உதாரணங்களை இங்கே காட்டலாம். முதலாவது உதாரணம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடையது.பல ஆண்டுகளாக தொடர்ந்து வீதியோரங்களில் போராடும் அன்னையர்கள் மிகச்சிலர்தான். அவர்களும் வீதியோரத்தில் குடில்களை அமைத்து தங்கி இருக்கிறார்கள்.அப்போராட்டங்கள் மக்கள் பயப்படவில்லை எனினும், தொடர்ச்சியாக நடப்பவை.அடுத்த போராட்டம் கேப்பாபிலவில் காணிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். அதில் போராடிய பெண்கள் படையினரின் பெரும்படைத்  தளங்களின் முட்கம்பி வேலிகளின் ஓரமாக அமர்ந்திருந்தது மழைக்கும் வெயிலுக்கும் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து தொடர்ச்சியாகப் போராடினார்கள். அப்படித்தான் இரணைதீவில் தமது வீடுகளை மீட்கச் சென்ற பெண்களும் போராடினார்கள். இந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதாரணங்களின் பின்னணியில்தான் காலிமுகத்திடலில் கோட்டா வீட்டுக்குப் போ என்ற கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காலிமுகத் திடலில் கூடாரம் அமைத்துத் தங்கியிருப்பவர்களுக்கிடையே ஒரு கூட்டுணர்வு உண்டு. தன்னியல்பாக அவர்கள் அமைப்பாகி வருகிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து தலைமகள் மேலெக்கூடும். அரசியல் விழிப்புடைய தலைமைகளால் வழிநடத்தப்படாத போராட்டங்கள் ஒன்றில் தாமாகச் சோர்ந்து போய்விடும். அல்லது பலப்பிரயோகத்தின் மூலம் ஒடுக்கப்படலாம்.அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பலத்தை பிரயோகிக்கும் முடிவை இதுவரை எடுக்கவில்லை. நேற்று-சனிக்கிழமை-காலிமுகத்திடலை நோக்கி போலீஸ் வாகனத் தொடர் அணி ஒன்று  நகர்த்தப்பட்டது.எனினும் அது பின்னர்  பின்னெடுக்கப்பட்டது.அது கோட்டா கோகமவின் மீதான ஓர் உளவியல் தாக்குதலே 

அதேசமயம் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தோடு இணக்கத்துக்கு வரத் தயாரில்லை.அவை அரசாங்கத்தை எப்படித் தோற்கடிக்கலாம் என்றே சிந்திக்கின்றன. ஆனால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அல்லது ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகளிடம் போதிய பலம் இல்லை என்றே தெரிகிறது. அரசாங்கத்திடமிருந்து விலகி நிற்கும் அரசாங்கத்தின் முன்னாள் கூட்டாளிகளை நம்ப முடியாது. அரசாங்கம் அவர்களை ஏதோ ஒரு விதத்தில் சமாளித்து ஒரு புதிய அமைச்சரவையை உருவாக்கலாமா என்று தொடர்ந்து எத்தனிக்கிறது. இதனால் விவகாரம் இப்பொழுது ஒரு யாப்பு நெருக்கடியாக மாறிவருகிறது. யாப்பின்படி அரசாங்கத்தை கவிழ்ப்பது கடினம் என்று தெரிகிறது. அரசாங்கத்தை கவிழ்க்கத் தேவையான பலம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. யாப்புக்கு வெளியே போய் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை. இதனால் ஏறக்குறைய அரசற்ற ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இந்த அரசற்ற நிலையினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள்தான் மேலும் பாதிக்கப்படுவார்கள். வர்த்தகர்கள் பொருட்களை விரும்பிய விலையில் விற்கிறார்கள். எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம் எல்லாவற்றிலும் முறைகேடுகள் காணப்படுகின்றன.

ஒருவித அரசற்ற நிலை தொடர்ந்து நீடித்தால் பொதுமக்களின் தன்னியல்பான எழுச்சிகள் மேலும் அதிகரிக்கும். அதேசமயம் ஐஎம்எப் போன்ற உலகப் பொது நிறுவனங்களும் அரசாங்கத்துக்கு உதவத் தயங்கும்.ஏனென்றால் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பிரதான முன்நிபந்தனை அரசியல் ஸ்திரத்தன்மை ஆகும். பொருளாதார நெருக்கடிகள் இப்பொழுது யாப்பு நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை என்ற வளர்ச்சியை அடைந்துவிட்டன. எனவே இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது அரசியல் ஸ்திரத்தன்மைதான். ஆனால் அவ்வாறான ஓர் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கத்தால் முடியவில்லை.அதே சமயம் அப்படி ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தோடு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகளும் தயாரில்லை.எனவே அரசியல் ஸ்திரமின்மை அல்லது ஒருவித அரசற்ற நிலை தொடர்ந்தும் இருக்கப்போகிறது?

அதாவது கோட்டா வீட்டுக்குப் போக மாட்டார்.அவரை வீட்டுக்கு அனுப்புவதற்காக காலிமுகத்திடலில் திரண்டிருக்கும் மக்களும் இப்போதைக்கு வீட்டுக்குப் போக முடியாது என்று தெரிகிறது.ஒரு உல்லாச வெளி நாட்டின் உலைக்களமாக இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கொதித்துக் கொண்டிருக்கப் போகிறது?

இதே காலிமுகத்திடலில் 1956இல் தமிழ் சத்தியாக்கிரகிகள் வெண்ணிற ஆடைகளோடு தமது அறவழிப் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்கள் தனிநாடு கேட்கவில்லை. சிங்கள மக்களுடைய சாப்பாட்டை தட்டிப் பறிக்கவில்லை. நாட்டைப் பிரிக்க சொல்லியும் கேட்கவில்லை.சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படுவதை எதிர்த்தார்கள்.சத்தியாகிரகிகள் மத்தியில் மக்கள் பிரதிநிதிகளும் இருந்தார்கள். ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் என்ன செய்தது? அறவழிப் போராட்டத்தின் மீது குண்டர்களை  ஏவிவிட்டது.குண்டர்கள் சத்தியாக்கிரகிகளை அடித்து மிதித்தார்கள்.சிலருடைய காதுகளைக் கடித்தார்கள்.போலீசார் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு நின்றார்கள்.இவ்வாறான வன்முறைகளின் தொடர் விளைவாக நாடு மீளமுடியாத வன்முறைச் சுழலுக்குள் சிக்கியது.யுத்தத்தின் சங்கிலித்தொடர் விளைவே இப்பொழுதுள்ள  பொருளாதார நெருக்கடி.சுமார் அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களின் அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு நசுக்கினார்கள். அதன் விளைவாக வந்த ஆயுதப் போராட்டத்தையும் 2009 ஆம் ஆண்டு நசுக்கினார்கள். அந்த வெற்றியை இதே காலிமுகத்திடலில் விமரிசையாகக் கொண்டாடினார்கள்.இப்பொழுது எல்லா வெற்றிகளும் தோல்விகளாக மாறிவிட்டன.அரை நூற்றாண்டுக்கு மேலாக இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு முட்டாள் தீவு மீண்டும் ஒருதடவை காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருக்கிறது?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More