முதற்தொகுதி குடியேறிகளுடன் விமானம் செல்ல மன்று அனுமதி!
பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ள ஈரானியப் பிரஜை ஒருவர், தன்னை றுவாண்டாவுக்கு அனுப்பி வைத்தால் அங்கு வைத்து ஈரானிய ரகசிய முகவர்களால் தேடிப்பிடித்துக் கொல்லப்படநேரும் என்று அச்சம் வெளியிட்டிருக்கிறார்.
ஈரானிய பொலீஸ் படையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அதிகாரியான அவர், அரச உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுத்த காரணத்தால் தண்டனைக்கு அஞ்சி நாட்டை விட்டுத் தப்பித் துருக்கி வழியாக வந்து கடந்த மே மாதம் பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்தார் என்று பிபிசி தெரிவிக்கிறது. அவரைப் போலவே மேலும் பல தஞ்சக் கோரிக்கையாளர்கள் றுவாண்டாவில் தங்கள் பாதுகாப்புக் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோருபவர்களை றுவாண்டா நாட்டில் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கும் திட்டத்தின்படி முதலாவது தொகுதியினர் அடுத்தவாரம் விமானம் மூலம் அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
அகதிகளுடன் முதலாவது விமானம் கிளம்பும் போது ஓடுபாதையில் வைத்து அதனை வழிமறிப்பதற்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 21 பேர் அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவான மனித உரிமைகள் இயக்கங்களைச் சார்ந்தோர் இதுவிடயத்தில் உயர் நீதிமன்றத்தை நாடிக் குடியேறிகளை றுவாண்டாவுக்கு அனுப்பிவைப்பதை இடைநிறுத்தும் நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு முயன்று வருகின்றனர்.
ஆனால் நீதிபதி ஒருவர் தடை உத்தரவை விடுக்க மறுத்து விமானப் பயணத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறார். றுவாண்டா அனுப்பப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்ற தஞ்சக் கோரிக்கையாளர்கள் அரசின் அந்த முடிவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். எதிர்க் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களது கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே பிரிட்டிஷ் அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. பொறிஸ் ஜோன்சன் அரசின் கொள்கைப் படி பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்ற குடியேறிகள் அனைவரும் ஆபிரிக்க நாடான றுவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு அவர்களுக்கான விசேட தங்கும் இடங்களில் வைத்தே அவர்களது புகலிட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.விண்ணப்பம் ஏற்கப்பட்டால் அங்கேயே
அவர்கள் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து கல்வி மற்றும் தொழில் புரிவதற்கு பிரிட்டிஷ் அரசு ஏற்பாடுகளைச் செய்யும்.உயிராபத்துடன் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி நாட்டுக்குள் நுழைகின்ற ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்திக் குறைப்பதற்கு இத் திட்டம் உதவும் என்று பிரிட்டிஷ் அரசு நம்புகின்றது. ஆயினும் சட்டபூர்வமான வழிமுறைகளில் நாட்டுக்குள் வந்து தஞ்சம் கோருகின்ற எவருமே அவ்வாறு றுவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
11-06-2022