காணாமலாக்கப்பட்ட குடும்பத்தவர்களின் அவல வாழ்வுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படுமென தான் நம்புவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் மட்டக்களப்பு – தும்பங்கேணியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ”யுத்தம் ஏற்படுத்திய கொடுமையான பாதிப்புக்கள் பற்றி நான் அனுபவ ரீதியாக நன்கு அறிவேன். அரந்தலாவ அசம்பாவிதங்களுக்குப் பின்னர் அம்பாறை நகரத்தில் வாழும் 144 தமிழ் குடும்பங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதென முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன எனக்கு உத்தரவிட்டதை நான் இன்னமும் நினைவு கூருகின்றேன். அதன்படி அந்த தமிழ் குடும்பங்களின் பாதுகாப்பை நான் உறுதிப்படுத்தினேன்.
சில வாழ்வாதார வேலைத்திட்டங்களை மக்களுக்காக முன்னெடுக்க வேண்டியிருந்ததால் கருணா அம்மான் போன்ற விடுதலைப் புலிகளின் போராளிகள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். தற்போது மாற்றங்களே உடனடியாக தேவைப்படுகின்றன. இக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பல அபிவிருத்திகளும் தேவையாகவுள்ளன. சம்பூர் மக்களின் நிலத்தை வழங்க ஏற்பாடு செய்தேன். அதுபோல் மீள்குடியேற்றங்களும் வெகு விரைவில் செய்யப்பட வேண்டும்.
உண்மைகளைக் கண்டறியும் குழுவின் அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என நம்புகின்றேன். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நான் அரசியல்வாதியல்ல. ஆனாலும், பல அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றேன். கிராம ராஜ்ஜிய கொள்கைக்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை வெகுவிரைவில் அமுலாகும் என நம்புகின்றேன்’ என தெரிவித்துள்ளார்.