யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வங்கியில் 96 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு குறித்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார். அவர் யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்கி தனது பையை பார்த்த வேளை அதனுள் இருந்த பணத்தினை காணவில்லை.
அவ்வேளை அப்பகுதியில் வீதி கடமையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து பொலிசாரிடம் அது தொடர்பில் முறையிட்டுள்ளார்.
அதனை அடுத்து அந்த மூதாட்டியின் அடையா அட்டையை வாங்கிக்கொண்டு, முச்சக்கர வண்டியில் தம்மை பின் தொடருமாறு அறிவுறுத்தி விட்டு பொலிஸார் பேருந்தினை துரத்தி சென்று , கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகில் வழிமறித்து , மூதாட்டியின் பணம் காணாமல் போனமை தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பேருந்து நடத்துனரின் உதவியுடன் , பேருந்தை சோதனையிட்டனர். பணத்தினை காணாத நிலையில் , பயணிகளை சோதனையிட போவதாக கூறி , ஒரு சில பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி சோதனையிட்ட போது , பேருந்தினுள் பணம் கிடப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
இருக்கை ஒன்றின் கீழ் இருந்து பணத்தினை பொலிஸார் மீட்டனர். அதில் 7 ஆயிரம் ரூபாய் குறைவாக 89ஆயிரம் ரூபாய் பணமே காணப்பட்டது.
அதேவேளை அங்கு வந்திருந்த பணத்தினை தவறவிட்ட மூதாட்டி , இந்த பணம் கிடைத்ததே பெரிய விடயம் என கூறி பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.
அதனை அடுத்து பேருந்தில் பயணித்த பயணிகளும் பொலிஸாருக்கு நன்றியையும் , பாராட்டையும் தெரிவித்த பின்னர் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.