குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பணத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களில் உரிய முறையில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமுல் படுத்தப்படவில்லை என தெரிய வருகின்றது.
இலங்கையில் கடந்த 3ம் திகதி முதல் தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்தது. அதன் மூலம் பொது மக்கள் தமக்கான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்காக அலுவலகங்கள் , திணைக்களங்கள் ஆகியனவற்றில் தகவல் வழங்குவதற்கு என பிரத்தியோகமாக உத்தியோகஸ்தர் ஒருவர் இருப்பார் எனவும் தெரிவிக்கபட்டது.
இந்நிலையில் யாழில் உள்ள பிராதன அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களில் அவை உரிய முறையில் அமுல் படுத்த ப்படவில்லை. யாழ்.மாவட்ட செயலகத்தில் தகவல் வழங்குவதற்காக மேலதிக அரசங்க அதிபரே நியமிக்கப்பட்டு உள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இதுவரை எந்தவொரு அதிகாரியும் இதற்கு என நியமிக்கப்படவில்லை. அது தொடர்பில் பிரதி ஆணையாளர் தெரிவிக்கையில் ,
நாம் மக்களுக்கு எந்த தகவல்களையும் மறைக்கவில்லை. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டம் தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது அதனை நடைமுறைப்படுத்த சில மாதங்கள் தேவை. உங்களுக்கு என்ன தகவல் வேண்டுமோ அது தொடர்பில் கடிதம் மூலம் கேளுங்கள் அதற்கான பதில்களை வழங்குகின்றோம். என தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச செயலகத்தில் தகவல்களை வழங்குவதற்கு நிர்வாக உத்தியோகச்தரே நியமிக்கப்பட்டு உள்ளார். தமக்கு இப்போது தான் அறிவித்தல்கள் கிடைக்கபெற்று உள்ளான. இன்னமும் கேள்வி பத்திரம் தயாரிக்க வில்லை ஏதேனும் தகவல்கள் தேவை எனில் உரிய அதிகாரிகளிடம் தற்போது கேட்டு பெற்றுக்கொள்ள முடியும். மிக விரைவில் , எமது பிரதேச செயலகம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து முடித்து விடும் என தெரிவித்தார்.
அதேபோன்று நல்லூர் பிரதேச சபையில் பொது சன தொடர்பாடல் உத்தியோகச்தரே தகவல் வழங்கும் உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்டு உள்ளார்.