போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் தங்களது கருத்தில் தெரிவித்ததாவது
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி
இலங்கையில் இருந்து தப்பி ஓடிய ஜனாதிபதி கோத்தபாயவிற்கு எந்த நாடும் அகதி அந்தஸ்து கொடுத்து எந்த நாடும் வாழ்வதற்கு இடம்கொடுக்க வேண்டாம்.மக்கள் போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதை நாம் வரவேற்கின்றோம்.எமது உறவுகளை இந்த ஜனாதிபதி பிரதமரிடம் தான் கொடுத்துவிட்டு தொலைத்து விட்டுள்ளோம்.
இறுதி யுத்தத்தின் போது எமது உறவுகளை இவர்களிடம் தான் ஒப்படைத்திருந்தோம்.எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தான் அன்றிலிருந்து இன்று வரை கேட்டு இருக்கின்றோம்.எமது உறவுகளை காணாமல் ஆக்கிய ராஜபக்ஸ குடும்பத்திற்கு எவரும் ஆதரவு அழிக்க வேண்டாம்.இன்று எமது உறவுகளை காணாமல் ஆக்கிவிட்டு தற்போது அவர்களும் காணாமல் ஆக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் நாம் இருக்கின்றோம்.என்றார்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர் அழகேஸ்வரி
நாங்கள் தற்போது 50 வீதம் ஆனந்தமாகவும் 50 வீதம் கவலையாகவும் தான் இருக்கின்றோம்.ஏனெனில் 12 வருடங்கள் நாங்கள் போராடியமைக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை.ஆனாலும் கோட்டபாய துரத்தப்பட்டுள்ளதால் எமக்கு ஒரு சந்தோசம் உள்ளது.ஆனால் இனியும் அவர்கள் தான் வருவார்கள் என்ற சந்தேகமும் எமக்குள்ளது.இந்நிலையில் இனியும் எம்மால் போராட முடியாது.வயது சென்று கொண்டு இருக்கின்றது.எதிர்கால ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் எமது விடயத்தில் தலையிட்டு தீர்வினை பெற்று தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க ஆலோசகர் தாமோதரம் பிரதீபன்
இந்த நாட்டின் ஜனாதிபதி பிரதமரின் சர்வதிகார போக்குடன் தமிழர்களின் பூர்விக இடங்களை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்.இதற்காக செயலணி ஒன்றினை உருவாக்கி பல மோசடிகளை மேற்கொண்டிருந்தார்கள்.இதன் விளைவாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையிலான தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டிருந்தன.வடகிழக்கிலும் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.எனவே இந்த செயற்பாட்டிற்கு மூல காரணமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மக்களின் போராட்டத்தினால் நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளார்.இறுதியுத்த மனித உரிமை மீறல் செயற்பாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட இவருக்கு எந்த நாடுகளும் அடைக்கலம் கொடுக்க கூடாது என்பதை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.