என்ன இது சின்னப் பிள்ளைத் தனமாய் இருக்குது? என்று நீங்கள் எல்லாரும் நினைக்கிற மாதிரித்தான் நானும் நினைக்கிறன். பின்னை என்ன? ஆட்சியைக் கைப்பற்ற பாதை யாத்திரை நடத்தலாம் எண்டால் எலக்சன் டிப்பார்ட்மன்ட் எதுக்கு? நல்ல சிரிப்பாய் கிடக்குது… அதுதான் மக்கள் தேர்தலிலை வாக்களிச்சு, ஆட்சியும் வேண்டாம் ஆளும் வேண்டாம் எண்டு வீட்டுக்கு அனுப்பிட்டுதுகளே?
பிறகேனாம் கால் தேய நடக்கிறார். சின்னப் பிள்ளையள் பலூன் கேட்டு அடம் பிடிச்ச மாதிரி அடம்பிடிக்கிறார். ஓ.. ஆட்சியை தாவென்று அடம்பிடிக்கிறார். உப்பிடி அடம்பிடிச்சு அமைக்கிறது ஆட்சியலில்லை.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எண்டுபோட்டு போகவெல்லோ வேணும்.. எல்லாம் அதிகார மோகம்.. அதிகாரம் கண்ணை மூடி தெருவிலை கால் தேய நடக்கவிட்டிட்டுது…
தன்ரை ஆட்சிக் காலத்திலை பாதயாத்திரைக்கு தடையில்லையாம். மகிந்த சொல்லுறார்.. பாத யாத்திரை செய்யிறவையளுக்கு கால் இருக்காது… இல்லாட்டி போராட்டங்களுக்குப் போறவைக்கு கழிவொயில் ஊத்துவினம்… வடகிழக்கிலை எங்கடை மக்கள் நிலத்துக்கும் காணாமல் போகச் செய்த உறவுகளுக்கும் போராட்டம் நடத்தேக்க உவர் என்ன செய்தவர்?
இஞ்ச நாங்கள் கால்களில்லாமல் இருக்கிறம். பாத யாத்திரை என்ன? சந்தைக்கே போக காலில்லாமல் கிடக்கிறம்! போரிலை எங்கடை கால்களை, எங்கடை உறவுகளை, எங்கடை அங்கங்களை பறிச்சு செய்த அநியாங்களுக்குத்தான் உவரை வீட்டுக்கு அனுப்பினனாங்கள். எங்கடை நாட்டிலை எத்தினை பிஞ்சுகள் கால் இல்லாமல் அலையுது… பிறகும் இவர் அநியாயம் செய்ய ஆட்சி கேட்டு கால் தேய பாத யாத்திரை போறாராம்…
முதலிலை முள்ளிவாய்க்காலிலை செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடினாலே பாத யாத்திரை போகத் தேவையில்லை.. தெருத் தெருவாய் அதிகாரப் பிச்சை எடுக்கத் தேவையில்லை… எங்கடை மண்ணிலை செய்த அநீதியள் அநியாங்களுக்கு நீதியை நிலை நாட்டினாலே போதும்.. என்ன பிறகு இவர் பாதை யாத்திரை போறது கஷ்டமாகும்… இதெல்லாம் கழுதை தேஞ்சு தட்டெறும்பாகினதை தான் காட்டுகுது… மகிந்தவின்ரை கால்தான் தேயுது…
யாழ்ப்பாணத் தம்பி