யாழ்ப்பாணம் “அரியாலை கில்லாடிகள் -100” நடாத்திய முதலாவது பருவகால தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப் போட்டியில் பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியும் தமிழ் ஸ்ரார் டொட்மொன்ட் அணியும் மோதிக் கொண்டன.
அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் JZ தமிழின் அனுசரணையுடன் ஏ.கே.எஸ்.எல் குழுமத்தின் தலைவர் என்.சுதேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பனர் செல்வம் அடைக்கலநாதனும், கௌரவ விருந்தினராக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தியாகராஜா நிரோஸ், யாழ்.மாநகர பிரதி முதர்வர் ரி.ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் ஸ்ரார் டொட்மொன்ட் அணியினர், ஆரம்பத்தில் சிறிது தடுமாறி, சீரான இடைவெளியில் இலக்குகளை இழந்தனர். இருப்பினும் பின்வரிசை ஆட்டக்காரர்களின் உதவியுடன் 10 ஓவர்கள் முடிவில் 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
68 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியினரும் ஆரம்பத்தில் தடுமாறிய போதும், நடு வரிசை ஆட்டக்காரர்களின் உதவியுடன் வெற்றி இலக்கை எட்டி , “அரியாலை கில்லாடிகள் – 100” நடத்திய முதலாவது பருவகால தொடரின் (ஏ.கே.எஸ்.எல்) முதலாவது வெற்றிக் கிண்ணத்தை பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியினர் தனதாக்கிக் கொண்டனர்.