இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.
குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த 16 பேரிடமும் தமிழக கடலோர காவல் படையினர் மற்றும் க்யூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை தஞ்சம் கோரி சென்றவர்கள் தொடர்பில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் 16 நபர்களில் ஒருவர் கிளிநொச்சி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றினை உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்ற செயலின் பிரதான சந்தேக நபர் என கண்டறிந்துள்ளனர்.
குறித்த நபர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில் இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்றுள்ளார் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனையவர்கள் தொடர்பிலும் இலங்கை பொகாவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.