15-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (27) ஆரம்பமாகின்றது . 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது. இன்றைய முதலாவது போட்டியில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் போட்டியிடவுள்ளன.
இந்த போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, பங்களாதேசை கடைசி பந்தில் வீழ்த்தி வென்று கிண்ணத்தினைக் கைப்பற்றியிருந்தது.
இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை போட்டியை நடத்த இயலாது என தொிவித்து விட்டது.
இதையடுத்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று முதல் செப்டம்பர் 11-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான், கொங்கொங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஸ் , ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை போட்டியிட்டு முடிவில் முதல் -2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக . 7 முறை கிண்ணத்தினை வென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.