சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள போதிலும், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு அரசாங்கம் அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த உடன்படிக்கை தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காவிட்டால் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் என்ற வகையில் அந்த ஒப்பந்த நகலை நாடாளுமன்றில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் தீர்மானங்களே தற்போதைய நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டிய அவர், இனிமேலும் சொந்த விருப்பங்கள் மற்றும் கற்பனைகளின் அடிப்படையில் செயற்பட அரசாங்கத்தை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.
இலங்கை ஒரு கொள்ளைக்காரர்களால் நடத்தப்படுகிறது என்பதை சர்வதேச நாணய நிதியமும் முழு உலகமும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஊழல்களை நிறுத்தி புதிய சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கணக்குகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை நிதியை நாடு திரும்பக் கொண்டுவர வேண்டும் என்றும் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை தண்டிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.