இலங்கையின் பொருளாதார மீட்சி, நல்லிணக்கம், சட்ட சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஜனநாயக விழுமியங்களுக்கு முழுமையாக மதிப்பளித்து இலங்கைக்கு ஆதரவளிக்கவும் தாயார் என, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழிப் புதுப்பித்தல் தொடர்பான பொது விவாதத்தின் போதே நேற்று (13.09.22) ஜெனீவாவில் உள்ள ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தத்தை, சட்டத்தில் உள்ள நீண்டகால குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான முதல் படியாக தாம் பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தேவையற்ற வன்முறை மற்றும் சமீபத்திய கைதுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு கவலை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சீர்திருத்த முயற்சிகளை வலுப்படுத்தவும் முக்கிய பிரச்சினைகளில் உறுதியான முடிவுகளை முன்வைக்கவும், குறிப்பாக சர்வதேச தரங்களுக்கு அமைவாக முழுமையாக பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் சிவில் சமூகம் சுதந்திரமாக செயற்படுவதற்கும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை நீக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது