முன்மொழியப்பட்டுள்ள புனர்வாழ்வு பணியக சட்டமூலம், நீதி அமைப்பை இராணுவமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது என்றும் மக்களின் இறையாண்மையை அது மீறுகிறது என்றும் உயர்நீதிமன்றத்தில் நேற்று (29.09.22) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் செப்டெம்பர் 23ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, ‘அறகலய’ எனும் பொதுப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சட்டத்தரணி அமில சுயம ஏகொடமஹவத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட தீர்மான மனுவில் மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை மேலும் துன்புறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், நீதித் துறையின் உத்தரவின்றி நபர்களை புனர்வாழ்வுக்கு அனுப்பும் அதிகாரம் இந்த பணியகத்துக்கு கிடைக்கும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 3 மற்றும் 4 வது பிரிவுகளை குறித்த சட்டமூலம் மீறும் என்றும் மக்களின் நீதித்துறை அதிகாரங்களைத் தவிர்க்கும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மைக்கு மேலதிகமாக வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணை தேவை என்று அறிவிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
தீவிர அல்லது அழிவுகரமான செயல்களில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் மற்றும் தனிநபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் தீவிர அல்லது அழிவுகரமான எனும் பதங்களுக்கு விளக்கமளிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.