“ரிக் ரொக்” மற்றும் “ஒன்லைன் கேம்” ஆகியவற்றுக்கு அடிமையாகி , அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்ரொக்குக்கு அடிமையாகி அதன் மூலம் காதல் வயப்படுதல் , அதிக நேரம் ரிக்ரொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவ்வாறான சிகிச்சைகளுக்கு பெரும்பாலும் விரும்பி சிகிச்சை பெற பலர் வைத்திய சாலைகளுக்கு செல்வதில்லை. அவ்வாறு இருக்கையில் கடந்த 09 மாதங்களில் 16 பாடசாலை மாணவர்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர் என்றால் , யாழில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவாக இருக்கலாம் என தாம் அஞ்சுவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை , தரம் 09ஆம் வகுப்பு மேற்பட்ட 97 வீதமான மாணவர்கள் சொந்தமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்களாகவோ , பெற்றோரின் தொலைபேசிகளை அதிகம் பாவிப்பவர்களாகவோ உள்ளனர்.
குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயது வரையிலான மாணவர்கள் பெரும்பாலும் இணைய விளையாட்டுக்களில் (ஒன்லைன் கேம்) ஈடுபடுபவர்களாக உள்ளனர்.
இவ்வாறாக கையடக்க தொலைபேசிகளுக்கு மாணவர்கள் அடிமையாவதால் , நீரழிவு , உயர் குருதி அழுத்தம் , கொலஸ்ரோல் , நோய் எதிர்ப்பு தன்மை குறைவடைதல் , என்புத்தொகுதி சார் நோய்கள் என்பவற்றுக்கு ஆளாவார்கள்.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்ணை சிமிட்ட வேண்டும். இணைய விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, பார்வை குவிப்பை ஓர் இடத்தில் செலுத்துவதனால் , நிமிடத்திற்கான கண் சிமிட்டல் 8 தடவைகளை விட குறைகின்றன. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். சில வேளைகளில் பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடலாம்.
எனவே பிள்ளைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பும் , கண்டிப்பும் கவன குவிவான செயற்பாடுமே பிள்ளைகளின் உடல் – உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என குழந்தை மருத்துவ நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்தார்.