யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை யாழ்.நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை சிற்றுண்டி சாலை உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பொது நூலகத்தில் இயங்கும் சிற்றுண்டி சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதாக யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த 09ஆம் திகதி சுகாதார பரிசோதகர் சிற்றுண்டி சாலைக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டதுடன் , அங்கு காணப்பட்ட சில குறைப்பாடுகளை உரிமையாளருக்கு சுட்டிக்காட்டி , அதனை நிவர்த்தி செய்வதற்கு கடந்த 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது.
அந்நிலையில் 28ஆம் திகதி மீள சென்று பரிசோதித்த போது , சுகாதார பரிசோதகரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படாமையால் , நேற்றைய தினம் வியாழக்கிழமை சிற்றுண்டி சாலை உரிமையாளருக்கு எதிராக யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது உரிமையாளர் குற்றத்தினை ஏற்றுக்கொண்டமையால் , உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்த நீதவான் , சுகாதார பரிசோதகரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் சிற்றுண்டி சாலைக்கு சீல் வைக்குமாறும் கட்டளையிட்டார். அதனை அடுத்து சிற்றுண்டி சாலை சுகாதார பரிசோதகரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.