கேப்பாபிலவு மக்களின் அமைதியான போராட்டங்களில் பங்கு கொள்ள இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை.சோ.சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட கேப்பாபிலவு நிலங்களை விடுவிக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாவை.சோ.சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில் ஜனநாயக வழிகளில் அரசுப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் சொந்த நிலங்களை மீட்கவும் அந்த நிலங்களில் மீளக்குடியேறி வாழ்வதற்குமான உரிமை மறுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை நடாத்திவருகின்றனர். இனவிடுதலைப் போராட்ட காலங்களில் இழப்புக்களை அனுபவித்த மக்கள் திடசங்கற்பம் கொண்டு நடாத்தும் போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம். ஒரு திட்டமிட்ட அடிப்படையில் அனைவரும் ஒருங்கினைந்து இலக்கை எட்டும் வரை போராடுவது நியாயமானதேயாகும்.
இப் போராட்டங்களில் அமைதியான அஹிம்சை வழியிலான வன்முறைகளுக்கு இடமளிக்காத ஜனநாயகவழிப் போராட்டங்களில் நாம் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து அதற்குச் சொந்தமான மக்களைமீளக் குடியமர்த்துவோம் என ஜனாதிபதியும் அரசும் வாக்குறுதி அளித்து இரண்டு வருடங்களாகிவிட்டன.
ஜனாதிபதியும் அரசும் உடன் நேரடியாகக் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த மக்களை மீPளத் தங்கள் நிலங்களில் குடியேற்ற வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றோம். அனைத்துத் தரப்பு மக்கள் சிவில் அமைப்புக்கள் நிலமீட்புக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவதையும் வரவேற்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார்.
விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கடந்த 31ஆம் திகதி, முதல் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் அக் காணிகளுக்கு சொந்தமான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.